பாப்பிரெட்டிப்பட்டி:-
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் செல்வம் தங்களது வார்டு பொதுமக்களுடன் நேற்று பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவர், அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செயல் அலுவலர் குமுதா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கவுன்சிலர் செல்வம் கூறுகையில், கடந்த 8 மாதங்களாக எந்தவொரு பணியும் எனது வார்டில் நடக்கவில்லை. மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை என்றார். அவரை மற்ற கவுன்சிலர்கள் சமரசம் செய்தனர். அப்போது இன்னும் ஒரு வாரத்துக்குள் வார்டில் பணிகளை தொடங்காவிட்டால் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவேன் என்று கூறிவிட்டு கலைந்து வார்டு மக்களை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.