போதிய வருமானம் இன்றி பருத்தி விவசாயிகள் தவிப்பு

போதிய வருமானமின்றி தவிக்கும் பருத்தி விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆலங்குடியில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2022-11-03 23:44 IST

வருமானம் ஈட்ட முடியாத நிலை

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாற்று விவசாயமாக பருத்தி விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் தென்னை, பலா, நெல், வாழை, கரும்பு, மக்காச்சோளம், உளுந்து, கத்தரி, வெண்டை மற்றும் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், காட்டுமல்லிகை, சம்பங்கி போன்றவைகளும் விவசாயிகள் மூலமாக, ஆண்டாண்டு காலமாக உற்பத்தி செய்யப்பட்டு வரப்படுகிறது.

இந்நிலையில், ஆண்டு தோறும் இவ்வகை விவசாய பயிர்களில் இருந்து உரிய வருமானம் ஈட்ட முடியாத சூழ்நிலை பல்வேறு வகையான பொருளாதார பின்னடைவு ஆகியவை நிலவி வருவதால், ஒரு மாற்று விவசாய பயிராக பருத்தி விவசாயம் செய்வதன் மூலம் உரிய வருமானம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையில் பல விவசாயிகள் மும்முரமாக பருத்தி உற்பத்தி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊடுபயிராக பருத்தி உற்பத்தி

பருத்தி உற்பத்தி என்பது ஈரோடு, சேலம், பழனி, திண்டுக்கல், மணப்பாறை, பெரம்பலூர், கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வரப்படுகிறது. வடகாடு, மாங்காடு, அனவயல், ஆண்டவராயபுரம் போன்ற பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயிகள் தங்களது நிலங்களில் தனியாகவும் ஊடு பயிராகவும் பருத்தி உற்பத்தி செய்து வருகின்றனர்.

இப்பகுதி பருத்தி விவசாயிகள் ஒன்றிணைந்து, வாடகை சரக்கு வேன் மூலமாக, சுமார் 3 டன் வரை பருத்திகளை பாபநாசம் பகுதிகளுக்கு கொண்டு சென்று அரசு ஒழுங்கு முறை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்து ஓரளவுக்கு வருமானம் ஈட்டி வருவதாகவும் இப்பகுதி விவசாயிகள் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

அரசு உதவி செய்தால் பயன்பெற ஏதுவாக இருக்கும்

அனவயல் ஜீவா நகரை சேர்ந்த செல்வராசு:- இப்பகுதியில் கடந்த ஓராண்டாக பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் குறைவான தண்ணீர் மற்றும் குறைந்த ஆட்களை பயன்படுத்தி பருத்தி கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் கணிசமான அளவில் லாபம் ஈட்டி வருகின்றனர். இருந்தாலும் போதிய வருமானம் இல்லாததால் அரசு ஏதேனும் உதவி செய்தால் தான் ஏனைய விவசாயிகள் பயன்பெற ஏதுவாக இருக்கும் என்றார்.

ஒழுங்கு முறை விற்பனை கூடம்

பருத்தி விவசாயி ராஜேந்திரன்:- இப்பகுதிகளில் நடவு செய்த பயிரையே மீண்டும் மீண்டும் நடவு செய்து வருகின்றனர். பருத்தி உள்ளிட்ட மாற்று விவசாயம் செய்ய முன் வரும் விவசாயிகளை அரசு ஊக்குவிக்க வேண்டும். ஆலங்குடி தொகுதியில் பருத்தி ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைத்து கொடுத்தால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்திகளை அலைந்து திரிந்து விற்பனை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்றார்.

பஞ்சுகளை பிரித்தெடுத்து விற்பனை

விவசாயி கருப்பையா:- ஆறு மாத பயிரான பருத்தி விதைகளை மணப்பாறை பகுதிகளில் இருந்து கிலோ ரூ.1,500 என்று வாங்கி வந்து விவசாய நிலங்களில் பார் எடுத்து இரண்டரை அடிக்கு ஒன்று வீதம் விதைகளை விதைக்கிறோம். விதைத்த மூன்றாவது மாதத்தில் இருந்து பருத்தி உற்பத்தி துவங்கி 15 நாளுக்கு ஒரு தரம் என முற்றிய பருத்தி காய்களை பறித்து அதில் உள்ள பஞ்சுகளை பிரித்தெடுத்து விற்பனை செய்து வருகிறோம். இதனை அரசு ஊக்குவித்தால் மற்ற விவசாயிகளும் பருத்தி உற்பத்தி செய்ய தயாராக இருப்பார் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்