ரூ.22 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ராசிபுரத்தில் 1,029 பருத்தி மூட்டைகள் ரூ.22 லட்சத்துக்கு ஏலம் போனது.

Update: 2023-07-20 18:45 GMT

ராசிபுரம்

பருத்தி ஏலம்

ராசிபுரம் அருகே உள்ள ஆர்.கவுண்டம்பாளையம் பவர் ஹவுஸ் பின்புறம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகம் உள்ளது. இங்கு பருத்தி ஏலம் நடந்து வருவது வழக்கம். நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு முத்துக்காளிப்பட்டி, புதுச்சத்திரம், மசக்காளிப்பட்டி, குட்டலாடம் பட்டி, சந்திரசேகரபுரம், முருங்கப்பட்டி, கவுண்டம்பாளையம், அணைப்பாளையம், வடுகம், குள்ளப்பநாயக்கனூர், சிங்களாந்தபுரம், தேங்கல்பாளையம், கரடியானூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

அதேபோல் ராசிபுரம், ஆத்தூர், ஈரோடு, சேலம், பெருந்துறை, திருப்பூர், திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை ஏலம் எடுத்தனர்.

ரூ.22 லட்சத்துக்கு விற்பனை

ஏலத்திற்கு ஆர்.சி.எச். ரக பருத்தி 960 மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 67 மூட்டைகளும், கொட்டு ரக பருத்தி 2 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டு இருந்தன. இதில் ஆர்.சி.எச். பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்து 689 முதல் அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 789-க்கும், சுரபி ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரத்து 500-க்கும் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 100-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரத்து 200 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.3 ஆயிரத்து 800-க்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தம் 1,029 பருத்தி மூட்டைகள் ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்