ரூ.2½ கோடிக்கு பருத்தி ஏலம்

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி ரூ.2½ கோடிக்கு ஏலம் போனது. இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,278-க்கு விலைபோனது.

Update: 2023-07-27 18:45 GMT

பொறையாறு:

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி ரூ.2½ கோடிக்கு ஏலம் போனது. இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,278-க்கு விலைபோனது.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி இ-நாம் மூலம், விவசாயிகளின் விளைபொருட்கள் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது செம்பனார்கோவில் பகுதியில் விவசாயிகள், தங்களது வயலில் சாகுபடி செய்த பருத்தியை அறுவடை செய்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் விவசாயிகளின் நலன் கருதி நாகை விற்பனை குழுவின் செம்பனார்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் இ-நாம் முறையில் கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி முதல் பருத்தி மறைமுக ஏலம் தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.

3 ஆயிரம் குவிண்டால் பருத்தி

அதன்படி நாகப்பட்டினம் விற்பனை குழு செயலாளர் ரமேஷ் தலைமையில், கண்காணிப்பாளர் சங்கர்ராஜா முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இந்த பருத்தி ஏலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 278-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 845-க்கும், சராசரியாக ரூ.6 ஆயிரத்து 755-க்கும் விலைபோனது. மொத்தமாக சுமார் 3 ஆயிரம் குவிண்டால் பருத்தி ரூ.2 கோடியே 50 லட்சத்துக்கு கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது.

இந்த ஏலத்தில் 983 விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை தேனி, கோவை, கொங்கணாபுரம், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் மற்றும் ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்த 18 வியாபாரிகள் மற்றும் மில் அதிபர்கள் கொள்முதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்