பருத்தியை நம்பும் விவசாயிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையின்றி நெல் கைவிட்டதால் கடந்த ஆண்டைபோல விவசாயிகள் பருத்தியை நம்பி உள்ளனர். அதற்கேற்ப பருத்தி நன்கு வளர்ந்து பூக்க தொடங்கி உள்ளது.

Update: 2023-02-09 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையின்றி நெல் கைவிட்டதால் கடந்த ஆண்டைபோல விவசாயிகள் பருத்தியை நம்பி உள்ளனர். அதற்கேற்ப பருத்தி நன்கு வளர்ந்து பூக்க தொடங்கி உள்ளது.

பருத்தி விவசாயம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இயல்பான அளவைவிட மிகக்குறைவாகவே பெய்தது. அவ்வாறு பெய்த மழையும் கடல்பகுதியில் பெய்துள்ளது. வைகை தண்ணீர் வந்து கண்மாய் பெருகிய பகுதிகளில் மட்டும் நெல் விவசாயம் நன்றாக உள்ளது. மற்ற பகுதிகளில் நெற்பயிர்கள் கருகி விவசாயிகளை பெருந்துயரத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் விவசாயிகள் சொல்ல முடியாத அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும், மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் நம்புவது மிளகாய் மற்றும் பருத்தியை மட்டும்தான். கடந்த ஆண்டு இவை இரண்டும் குறிப்பாக பருத்தி வரலாறு காணாத வகையில் விலை ஏற்றம் ஏற்பட்டு விவசாயிகளுக்கு அமோக லாபத்தை அள்ளித்தந்தது. இந்த ஆண்டும் மழை பெய்யாத நிலையில் நெல் விவசாயம் கைவிட்டதால் விவசாயிகள் பருத்தியை நம்பி களம் இறங்கி உள்ளனர்.

விவசாயிகள் நம்பிக்கை

கருகிய நெற்பயிர்களை அறுத்துவிட்டு பருத்திய நட்டு வளர்த்து வருகின்றனர். பலர் நம்பிக்கையின்றி நெல் பயிரிடாமலேயே பருத்தியை மட்டும் நம்பி பயிரிட்டுள்ளனர். இவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப தற்போது பருத்தி நன்றாக வளர்ந்து பூக்க தொடங்கி உள்ளது. பல பகுதிகளில் காய் காய்க்க தொடங்கி உள்ளது.

மாவட்டத்தில் இந்த ஆண்டு 10 ஆயிரத்து 836 ஏக்கரில் பருத்தி விவசாயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட ஆயிரத்து 500 ஏக்கர் அதிகம் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது இதற்கு சான்றாகும். ராமநாதபுரம் அருகே நயினார்கோவில், காவனூர், சாயல்குடி, டி.எம்.கோட்டை, உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பருத்தி நன்றாக வளர்ந்துள்ளது.

3 மடங்கு லாபம்

இதுகுறித்து பொன்னக்னேரி விவசாயி மைக்கேல் கூறியதாவது:- நெல் கைவிட்டதால் பருத்தி விவசாயம் செய்தோம். மழையின்றி போனாலும் இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட பருத்தி நன்றாக வளர்ந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கிலோ ரூ.35 வரை மட்டுமே விலை போனது. 2021-ம் ஆண்டு ரூ.55 வரைதான் விலை போனது. ஆனால், கடந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் பருத்தி விலை ரூ.100-ஐ தாண்டி தற்போது ரூ.125 வரை விலை போனது. இதனால் நல்ல லாபம் கிடைத்தது. இந்த ஆண்டும் அதேபோல் நம்பிக்கையுடன் பருத்தி விவசாயம் செய்துள்ளோம். பொதுவாக பருத்தியை பொருத்தவரை 1 மடங்கு செலவு செய்தால் அதனை விட 3 மடங்கு லாபம் கிடைக்கும். தற்போது அதிக பனிப்பொழிவு காரணமாக பருத்தியில் இலைசுருட்டு புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அதனை போக்க மருந்து தெளித்து வருகிறோம் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்