சூரமங்கலம்:
சேலம் இரும்பாலை அருகே சர்க்கார் கொல்லப்பட்டி ஊராட்சி வீரக்காரன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி மனைவி காமாட்சி (வயது 75). இவர், குடிசையில் வசித்து வந்தார். நேற்று காலை வீட்டில் கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு அருகில் கட்டி இருந்த மாட்டை பிடிப்பதற்காக சென்றார். திடீரென குடிசை தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்ட காமாட்சி அலறி கூச்சலிட்டார். தகவல் அறிந்த பொதுமக்கள் சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கும், இரும்பாலை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அப்படி இருந்தும் குடிசை முழுவதுமாக எரிந்து சேதமானது. வீட்டில் இருந்த ஒரு பவுன் தங்க தோடு, வெள்ளி கொலுசு ஒரு ஜோடி, ரூ.20 ஆயிரம் உள்பட ரூ.70 ஆயிரம் மதிப்பிலானவை தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தினர்.