பாரிமுனையில் உரிமம் இல்லாத 70 கடைகளுக்கு 'சீல்' - மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

பாரிமுனையில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட 70 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

Update: 2022-11-26 08:03 GMT

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பாரிமுனை, பூக்கடை, சவுகார்பேட்டை, மண்ணடி, சிந்தாதிரிப்பேட்டை ஜி.பி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உரிமம் இல்லாமல் செயல்படுவது மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து அந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி, உரிமம் இல்லாத கடைகளுக்கு 'சீல்' வைக்க சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.

அதன்பேரில் ராயபுரம் மண்டல உதவி வருவாய் துறை அதிகாரி நிதிபதி, ரங்கநாதன் ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட உரிமம் ஆய்வாளர்கள், களப்பணியாளர்கள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வார்டு 55 மற்றும் 59-க்கு உட்பட்ட பாரிமுனை, பிராட்வே தங்கசாலை தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உரிமம் பெறாத 70-க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு அந்த கடைகளை பூட்டி 'சீல்' வைத்தனர்.

அப்போது கடைக்காரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்கு போலீசார், கடைக்காரர்கள் உரிமம் பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து உரிய பணத்தை செலுத்தி விட்டு உடனடியாக உரிமம் பெற ஏற்பாடு செய்து தருவதாக கூறியதால் அமைதி அடைந்தனர்.

இதேபோல் நேரு விளையாட்டு அரங்கம் அருகே கண்ணப்பன் திடல் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் இயங்கி வருகிறது. அங்குள்ள 16 கடைக்காரர்கள் கடந்த சில வருடங்களாக சென்னை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்து உள்ளனர்.

பலமுறை மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கியும் கடைக்காரர்கள் சுமார் ரூ.30 லட்சம் வரை வாடகை பாக்கியை செலுத்தாமல் உள்ளனர். இதையடுத்து அந்த 16 கடைகளையும் பூட்டி 'சீல்' வைத்தனர்.

இதில் சில கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பே 'சீல்' வைக்கப்பட்டது. அந்த கடைகளை திறக்க வந்த உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்