தொழில் உரிமம், வரி செலுத்தாத 160 கடைகளுக்கு 'சீல்' மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
தொழில் உரிமம், வரி செலுத்தாத 160 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடைகள் நடத்த மாநகராட்சி வருவாய்த்துறை மூலம் தொழில் உரிமம் பெற வேண்டும். அதேபோல் கடை நடத்துபவர்கள் தொழில்வரி செலுத்த வேண்டும். வரி செலுத்தாக கடைகள் மீது மாநகராட்சி வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம் 5-வது மண்டலம் பூக்கடை பகுதியில் வார்டு 57-க்கு உட்பட்ட குடோன் சாலை, கோவிந்தப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 160 கடைகள் தொழில் உரிமம் பெறாமலும், தொழில் வரி செலுத்தாமலும் இயங்கி வருகின்றது.
இவர்களுக்கு தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் பெற கோரி வருவாய்த்துறை சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, நேற்று சென்னை மாநகராட்சி 5-வது மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் நிதிபதி ரங்கநாதன், முருகேசன், வரி மதிப்பீட்டாளர் ரஹமதுல்லா, உரிமம் ஆய்வாளர்கள் மணிகண்டன், பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று பூக்கடை பகுதியில் போலீசார் உதவியுடன் 160 கடைகளுக்கு சீல் வைத்தனர்.