புதுக்கோட்டை மன்னர் காலத்து செப்பேடு, அரசின் முத்திரை பதித்த ஓவிய பலகை

புதுக்கோட்டை மன்னர் காலத்து செப்பேடு, அரசின் முத்திரை பதித்த ஓவிய பலகை ஆகியவை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2023-02-01 18:45 GMT

செப்பேடு

புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. அவர்களது காலத்தில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டன. அவை தற்போது அரசு அலுவலகங்களாக பல இடங்களில் இயங்கி வருகின்றன. புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கி வந்தன.

இதனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடமாற்றம் செய்த போது செட்டில்மென்ட் அலுவலகத்தில் இருந்து மன்னர் காலத்து பழமையான செப்பேடு, மன்னர் அரசின் முத்திரை பதித்த ஓவிய பலகை ஆகியவை எடுக்கப்பட்டது. அதனை அப்போது மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அந்த 2 அரிய பொருட்களையும் கலெக்டர் கவிதாராமு புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமியிடம் நேற்று வழங்கினார். அப்போது ெதால்லியல் ஆய்வு கள தலைவரும், ஆய்வாளருமான கரூர் ராஜேந்திரன் உடனிருந்தார்.

ஸ்ரீரங்கம் கோவில்

இந்த செப்பேடு மற்றும் ஓவிய பலகை குறித்து தொல்லியல் ஆய்வாளர் கரு.ராஜேந்திரன் கூறுகையில், ``இந்த செப்பேடு 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கடந்த 1798-ம் ஆண்டு புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமான், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் அகண்ட தீபம் ஏற்றுவதற்காக மாத்தூர் அருகே சிங்கத்தாகுறிச்சி கிராமத்தில் ஒரு நிலத்தை தானமாக கோவிலுக்கு கொடுத்துள்ளார்.

அந்த செப்பேட்டில் மன்னரின் விருப்பம் கூறப்பட்டுள்ளது. நிலத்தை தானமாக கொடுத்த விவரம் தான் அதில் எழுதப்பட்டுள்ளது. இது அரிய செப்பேடு ஆகும். இதேபோல மன்னர் ஆட்சி காலத்து அரசின் முத்திரை பதித்த ஓவிய பலகையும் பழமையானது. அந்த ஓவியம் தாவரங்களாலும், மூலிகைகளாலும் வரையப்பட்டது. இந்த 2 அரும்பொருட்களும் அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இதனை பொதுமக்கள் பார்வையிடலாம்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்