சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு: ஏழை, நடுத்தர மக்களால் தாங்க முடியுமா?இல்லத்தரசிகள் கருத்து

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வால் ஏழை, நடுத்தர மக்களால் தாங்க முடியுமா? என இல்லத்தரசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-03-01 18:47 GMT

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றங்கள் ஏற்படும்போது அதன் அடிப்படையில் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. அதன்படி, ஒவ்வொரு மாதமும், முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டர்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கியாஸ் சிலிண்டர் விலை அதிகரிக்கும் போது எல்லாம் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

விலை உயர்வு

இந்த நிலையில், வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலையை நேற்று முதல் எதிர்பாராத அளவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளது. அதன்படி, ரூ.1,068 ஆக இருந்த வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.50 உயர்ந்து ரூ.1,118.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.351 உயர்ந்து ரூ.2,268-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கியாஸ் விலை உயர்வுக்கு நடுத்தரமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் கண்டத்தை தெரிவித்து உள்ளனர். எண்ணெய் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இது தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துகள் வருமாறு:-

தாங்கி கொள்ள முடியவில்லை

வெள்ளியணையை சேர்ந்த பவித்ரா:-

ஏற்கனவே பலமுறை உயர்த்தப்பட்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் குடும்ப செலவை சமாளிக்க முடியாமல் நிதி சுமையை சுமந்து கொண்டிருக்கும் நடுத்தர, ஏழை குடும்பங்களில் தற்போது 50 ரூபாய் விலை உயர்வு என்பது தாங்கி கொள்ள முடியாத ஒன்றாகும். இலவசமாக சிலிண்டர் இணைப்பு கொடுக்கிறேன் என்று பெருமையாக சொல்லும் அரசு, அதை ஏழைகளுக்கு கொடுத்து விட்டு, தற்போது தொடர்ந்து கியாஸ் விலையை உயர்த்தி கொண்டிருப்பது அரசுக்கு வருவாய் பெறக்கூடிய தந்திரமே ஆகும்.

ஏழை, நடுத்தர குடும்பங்களை பற்றியும், அவர்கள் பெறக்கூடிய வருவாய் குறித்தும் அரசு என்ன நினைத்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. மக்களின் அத்தியாவசிய தேவைகளை பற்றி கவலைப்படாமல் அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தி விட்டு, அதன் மூலம் வருவாயை ஈட்டி ஏழை மக்களுக்கு பயன்படாத திட்டங்களுக்கு பயன்படுத்தி என்ன பயன் என்பதை அரசு யோசித்து பார்த்து உயர்த்தப்பட்ட கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும்.

அனைவரும் பாதிக்கப்படுவர்

குளித்தலையை சேர்ந்த அமுதா:- பத்து ஆண்டுகளுக்கு முன்பு கியாஸ் சிலிண்டர் விலை ரூ.350 இருந்தது. இதை அடுத்து படிப்படியாக சிலிண்டர் விலை உயர்ந்து 1100 ரூபாய்க்கு மேல் வந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் சிலிண்டருக்கு ரூ.50 விலை உயர்வு என்பது நடுத்தர மக்களால் வாங்கி உபயோகிப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.அனைத்து இடங்களிலும் குடியிருப்பவர்கள் விறகு அடுப்புகளை உபயோகிக்க கூடாது என்று வீட்டின் உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். எனவே கியாஸ் சிலிண்டர் அடுப்புகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருக்கின்றனர். தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே சென்றால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள் எனவே சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விறகு அடுப்புக்கு தான் செல்ல வேண்டும்

நொய்யல் அருகே உள்ள முத்தனூர் பகுதியை சேர்ந்த லட்சுமி:-

மத்திய அரசு தொடர்ந்து வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வருகிறது. இந்த விலையை குறைத்ததாக சரித்திரம் இல்லை. கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு மானியம் தருவதாக கூறி வங்கி கணக்கு தொடங்க வைத்தனர். தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சிறிய தொகை வங்கி கணக்கிற்கு போடப்பட்டது. அதன் பின் மானிய தொகையை நிறுத்தி விட்டனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் ரூ.360-க்கு விற்பனையானது. தற்போது ரூ.1,118-க்கு விற்பனையாகிறது. மேலும் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருந்தால் அதனை வாங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். இதனால் மீண்டும் விறகு அடுப்பு மூலம் சமையல் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு சென்று விடுவோம்.

வாழ்வாதாரம் பாதிக்கப்படும்

தோகைமலை அருகே உள்ள வடசேரியை சேர்ந்த ரம்யா:-

ஏற்கனவே கியாஸ் சிலிண்டர் விலை ரூ.ஆயிரத்திற்கு மேல் விற்றதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து, அதிக சிக்கல் இருந்து வருகிறது.தற்போது மேலும் ரூ.50 உயர்வின் காரணமாக நடுத்தர மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தற்போது 10 மடங்கு விலை உயர்ந்து ரூ.1,200-க்கு வந்துள்ளது. இதனால் ஏழை மக்கள் பழைய மாதிரி விறகு அடுப்பினை உபயோகிக்க வேண்டிய நிலை வந்துவிடும்.

அதற்கும் இப்போது சிக்கல் உள்ளது. பெரும்பாலான இடங்களில் மரங்களே இல்லை. விறகு அடுப்பு பயன்படுத்தினால் விறகையும் காசு கொடுத்தும் வாங்கும் நிலை ஏற்படும். எனவே மத்திய அரசு இந்த விலை ஏற்றத்தை வாபஸ் பெற வேண்டும். மேலும் நடுத்தர மக்களுக்கு சலுகை விலையில் ரூ.700-க்கு கியாஸ் சிலிண்டர் வழங்கினால் நன்றாக இருக்கும்.

ஏற்றுக்கொள்ள முடியாது

வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த ரேணுகா தேவி:-

நாளுக்கு நாள் விலை வாசி ஏறிக்கொண்டே போகிறது. அந்த அளவுக்கு தனி நபர் வருமானம் மட்டும் ஏறவில்லை. இந்த நிலையில் வீட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே சென்றால் அதனை வாங்கி பயன்படுத்தவே முடியாத நிலை ஏற்படும். நாம் அனைவரும் என்றைக்கு விறகு அடுப்பில் இருந்து சிலிண்டருக்கு மாறி விட்டோமோ அன்றில் இருந்தே சிலிண்டர் விலையும் நாளுக்கு நாளுக்கு நாள் ஏறி கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வை ஏழைகளால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்