ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.;
சென்னை,
கொரோனா நோய் தொற்றின்போது பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்று அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2020-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில், கொரோனா நோய்க்கு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாத காலக்கட்டத்தில் இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கவே, உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் மிகவும் அச்சப்பட்டனர்.
இச்சூழ்நிலையில், தங்கள் உயிரை துச்சமென மதித்து, கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதன்படி, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துமனைகளில் அனுமதித்து, அவர்களுக்கு சேவையாற்ற தேவைப்படும் மருத்துவர்களும், செவிலியர்களும் MRB எனப்படும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் முன்களப் பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
கொரோனா நோய்த் தொற்றின்போது அதிக அளவில் செவிலியர் தேவைப்பட்ட சமயத்தில், மருத்துவ அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் செவிலியர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு, கொரோனா வார்டுகளில் பணிபுரிய வேண்டி, நேரடியாக அழைப்பாணை அனுப்பப்பட்டது. அவ்வாறு அந்த நெருக்கடியான, இக்கட்டான சூழ்நிலையில், பணியில் சேருவதற்கான அழைப்பாணை அனுப்பப்பட்ட நிலையில், சுமார் 40 முதல் 50 சதவீத செவிலியர்கள் மட்டுமே அழைப்பாணையை ஏற்று, தன்னலம் கருதாது கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் பணிபுரிய முன்வந்தனர்.
அப்படி தன்னலம் கருதாது, தங்களது உயிரை துச்சமென மதித்து பணியில் இணைந்த ஒப்பந்த செவிலியர்கள், கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முழு கவச உடையணிந்து, மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில், தங்களை வருத்திக்கொண்டு தன்னலம் கருதாது கடமையாற்றினார்கள்.
ஒப்பந்த மருத்துவர்களும், ஒப்பந்த செவிலியர்களும் கொரோனா நோய்த் தொற்றின்போது, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் அழைக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டவர்கள். இவர்களிடம் அப்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உங்களது தன்னலம் கருதாத சேவை ஜெயலலிதாவின் அரசுக்கு நன்கு தெரியும். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும்போது, உங்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும் என்று அதிமுக அரசின் சார்பாக நம்பிக்கை அளித்து அவர்களது பணியினை ஊக்கப்படுத்தினார்.
மக்களுக்கு சேவையாற்றக்கூடிய துறைகளில் மிக முக்கியமான மருத்துவத் துறை. எங்கள் துறை ஆட்சியில் இந்தியாவின் முதன்மை மருத்துவ மாநிலமாகத் திகழ்ந்தது தமிழ் நாடு. முக்கியமாக நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வந்தனர். அகில இந்திய அளவில் மருத்துவத் துறையில் முதலிடம் வகித்ததோடு, பல விருதுகளைப் பெற்று முன்னணி மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்தது.
முக்கியமாக, கொரோனா நோய்த் தொற்றின்போது பாரதப் பிரதமர் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில், தமிழகம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்று பாராட்டினார். அவரது இந்தப் பாராட்டிற்கு முக்கியமான காரணகர்த்தாக்கள் முன்களப் பணியாளர்களான மருத்துவர்களும், செவிலியர்களும் என்றால் அது மிகையல்ல.
மேலும், கொரோனா நோய்த் தொற்றின்போது, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை அளிக்கத் தயங்கியபோது, சுமார் 80 முதல் 90 சதவீதம் வரையிலான கர்ப்பிணித் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நாடியது அனைவரும் அறிந்த உண்மை. இவ்வாறு தங்கள் உயிரை துச்சமென மதித்து பணியாற்றிய ஒப்பந்த மருத்துவர்களையும், ஒப்பந்த செவிலியர்களையும், அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினரையும் நட்டாற்றில் விட்டது இந்த திமுக அரசு.
எனது தலைமையிலான அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளுக்கு சுமார் 1,820 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். இரண்டாம் கொரோனா நோய்த் தொற்றின்போது தன்னலம் கருதாது கொரோனா நோயாளிகளுக்காகப் பணியாற்றிய இந்த ஒப்பந்த மருத்துவர்களை வீட்டிற்கு அனுப்பிய இந்த அரசு இன்று தன்னலம் கருதாது பணிபுரிந்து வந்த ஒப்பந்த செவிலியர்களுக்கும் பணி நீட்டிப்பு இல்லை என்று வீட்டிற்கு அனுப்பியுள்ளது இந்த திமுக அரசு.
திமுக-வின் தேர்தல் அறிக்கை எண். 356 "ஒப்பந்த நியமன முறையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்"-ன்படி, தங்களது பணி, நிரந்தரம் செய்யப்படும் என்று எண்ணியிருந்த ஒப்பந்த மருத்துவர்கள் மற்றும் ஒப்பந்த செவிலியர்களின் வாழ்க்கையை வஞ்சிக்கும் வகையில், 2022-ம் ஆண்டு புத்தாண்டு பரிசாக ஒப்பந்த மருத்துவர்களை வீட்டிற்கு அனுப்பிய இந்த திமுக அரசு, 2023-ம் ஆண்டு புத்தாண்டு பரிசாக ஒப்பந்த செவிலியர்களையும் வீட்டிற்கு அனுப்பி அவர்களது எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
எப்போதும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை வசதியாக மறந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இந்த திமுக அரசு, ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று வெளியிட்ட அரசாணைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். உடனடியாக இந்த அரசாணையை ரத்து செய்து, தொடர்ந்து ஒப்பந்த செவிலியர்கள் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்த திமுக முதலமைச்சரை வற்புறுத்துகிறேன்.
மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தும்போது, கொரோனா நோய்த் தொற்று போன்ற இக்கட்டான சூழ்நிலையில் தங்களது உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த ஒப்பந்த மருத்துவர்களுக்கும், ஒப்பந்த செவிலியர்களுக்கும், முன்னுரிமை மதிப்பெண் வழங்கி, அவர்களுடைய பணியினை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று, இந்த திமுக அரசின் நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.