தொடர் மழை எதிரொலி:முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு:விவசாயிகள் மகிழ்ச்சி
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.;
தமிழக-கேரள மாநில எல்லைப்பகுதியில் முல்லைப்பெரியாறு அணை அமைந்து உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழைப்பொழிவு இல்லை. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து குறையத்தொடங்கியது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 50 கனஅடி நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 259 கன அடியாக அதிகரித்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதற்கிடையே நேற்று அணையின் நீர்மட்டம் 116.90 அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 256 கனஅடியாகவும் இருந்தது.
நீர்ப்பிடிப்பு மற்றும் தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- பெரியாறு 14.6, தேக்கடி 1, கூடலூர் 1.2, சண்முகா நதி 2, போடி 1.4, சோத்துப்பாறை 1.6, பெரியகுளம் 2.