தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் விடுப்பு போராட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் 345 பேர் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், 121 கடன் சங்கங்கள் மூடப்பட்டு இருந்தன.

Update: 2023-10-03 18:45 GMT

வாகனங்கள் வாங்க நிர்பந்தம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், பல்நோக்கு சேவை மையம் மற்றும் விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், நலிவடைந்த மற்றும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் சங்கங்களுக்கு, விவசாய உபகரணங்கள் மற்றும் லாரி, சரக்கு ஆட்டோ போன்ற வாகனங்கள் வாங்க நிர்பந்தம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இதனால் சங்கங்கள் மேலும் நஷ்டத்துக்கு உள்ளாகி, நிதிநிலை பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே உபகரணங்கள் வாங்க கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்களில் மனு கொடுத்து இருந்தனர்.

கடன் சங்கங்கள் மூடல்

ஆனால், கூட்டுறவு துறை அதிகாரிகள் இதற்கு எவ்வித உறுதியும் அளிக்கவில்லை. இதையடுத்து, உபகரணங்கள் வாங்க கட்டாயப்படுத்துவதை கண்டித்து, ஏற்கனவே வாங்கி உள்ள உபகரணங்களை, மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்த பணியாளர்கள், நேற்று முதல் காலவரையற்ற தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் சரகத்தில் 104, திருச்செங்கோடு சரகத்தில் 65 என மொத்தம் 169 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அதில் நாமக்கல்லில் 39, திருச்செங்கோட்டில் 9 என மொத்தம், 48 கடன் சங்கங்கள் மட்டுமே நேற்று திறந்து இருந்தன. மீதமுள்ள 121 கடன் சங்கங்கள் மூடப்பட்டு இருந்தன.

பணி பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் மொத்த பணியாளர்கள் 471 பேரில் 114 பேர் மட்டுமே பணிக்கு வந்து இருந்தனர். 345 பேர் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விவசாய கடன் வழங்கும் பணி, நகைக்கடன் வழங்கும் பணி, உரம், பூச்சி மருந்து வினியோகம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

இதற்கிடையே விவசாய உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் வாங்க வற்புறுத்த கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரனிடம் மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்