கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் வேலைநிறுத்தம்

கூடலூரில் சம்பள உயர்வு கோரி 3-வது நாளாக தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளனர்.;

Update:2023-08-05 01:00 IST

கூடலூர்

கூடலூரில் சம்பள உயர்வு கோரி 3-வது நாளாக தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளனர்.

சம்பள உயர்வு

கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். தங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள சம்பளம் வழங்குவது இல்லை என நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் ஓராண்டுக்கும் மேலாக பணம் செலுத்த வில்லை என கூறப்படுகிறது.

இதனால் தங்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தங்கள் கணக்கில் ஒப்பந்ததாரர் பணம் செலுத்த வேண்டும். தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 2 நாட்களாக நகராட்சி அலுவலகம் முன்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

3-வது நாளாக போராட்டம்

நேற்று முன்தினம் மாலையில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து தினக்கூலி ரூ.450 வழங்கப்படும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பணம் செலுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிடுவதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்தனர்.

இந்தநிலையில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் சம்பளம் உயர்த்தி வழங்க முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நேற்று 3-வது நாளாக கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர் வேலைநிறுத்தம்

இந்தநிலையில் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்தனர். இதற்கிடையே கடந்த 3 நாட்களாக தூய்மை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை வெளியே கொட்ட முடியாமல் வைத்துள்ளனர்.

இதேபோல் பொது இடங்களில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்