நீட் தேர்வில் தொடர் தோல்வி; குரோம்பேட்டை மாணவர் தற்கொலை

நீட் தேர்வில் தொடர்ந்து 2 முறை தோல்வி அடைந்த விரக்தியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-08-14 11:17 IST

நீட் தேர்வில் தோல்வி

சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். போட்டோகிராபரான இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன், 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

மருத்துவ படிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் 2 வருடமாக நீட் தேர்வு எழுதினார். ஆனால் தொடர்ந்து 2 முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. எனினும் மீண்டும் 3-வது முறையாக நீட் தேர்வு எழுதி அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்குவேன் என தந்தையிடம் நம்பிக்கையோடு கூறினார். இதற்காக நீட் பயிற்சி மையத்துக்கு ஆன்லைனில் பணமும் கட்டினார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நீட் பயிற்சி மையத்தில் தன்னுடன் படித்த மாணவர்கள் சிலர் 450 மதிப்பெண்கள் பெற்றும் அரசு ஒதுக்கீடு கிடைக்காததால் என்ஜினீயரிங் படிப்பை தேர்ந்தெடுத்து சேர்ந்துள்ளனர். 2 பேர் தனியார் கல்லூரியில் அதிக பணம் கட்டி நிர்வாக ஒதுக்கீட்டு சீட் பெற்று எம்.பி.பி.எஸ். சேர்ந்துள்ளனர். இதனால் நண்பர்கள் யாரும் தன்னுடன் மீண்டும் நீட் தேர்வு எழுதவில்லை என்பதால் மனகுழப்பத்தில் இருந்தார். இதனால் விரக்தி அடைந்த ஜெகதீஸ்வரன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸ்வரனின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்