ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தற்செயல் விடுப்பு போராட்டம்

8-ம் அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தற்செயல் விடுப்பு போராட்டம் நடந்தது. இதில் 55 சதவீதம் பேர் பங்கேற்றனர்.

Update: 2023-05-11 11:41 GMT

கீழ்பென்னாத்தூர்

8-ம் அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தற்செயல் விடுப்பு போராட்டம் நடந்தது. இதில் 55 சதவீதம் பேர் பங்கேற்றனர்.

தற்செயல் விடுப்பு போராட்டம்

ஊராட்சி செயலாளர்களுக்கு பணி விதிகளை காலதாமதமின்றி வெளியிடுதல் மற்றும் விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் ஊராட்சி செயலாளர்களுக்கு பணி விதிகளை மேலும் காலதாமதமின்றி வெளியிடுதல் மற்றும் விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு அனைத்து வட்டாரங்களிலும் வட்டார திட்ட அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும். வளர்ச்சித் துறையில் வட்டார உதவிப் பொறியாளர்கள் பணிகளுக்கு தொழில்நுட்ப அங்கீகாரம் வழங்கும் உச்சவரம்பினை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.

55 சதவீதம் பேர்

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக முதல்- அமைச்சர் அரசு ஊழியர்களின் போராட்ட காலங்கள் வேலை நாட்களாக கருதி ஆணையிடப்படும் என அளித்த வாக்குறுதியின்படி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் போராட்ட காலங்களை வரன்முறை செய்து ஆணைகளை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 55 சதவீதம் பேர் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் அலுவலர்கள், ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள், ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டன.

இதனால் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்