காா் பழுது நீக்க செலவு தொகை தராததால் வழக்கு:தொழில் அதிபருக்கு ரூ.36¾ லட்சம்இழப்பீடு வழங்க வேண்டும்

Update: 2023-07-25 18:45 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் குமாரசாமி (வயது61). தொழில் அதிபர். இவர் ரூ.75 லட்சத்தில் விலைக்கு வாங்கிய காரை, கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஆண்டு பிரிமீயமாக ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்து 58 செலுத்தி காப்பீடு செய்து உள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் இருந்து திருச்செங்கோடு வந்து கொண்டிருந்தார். அப்போது சேலம் அருகே பலத்த மழையால் கார் என்ஜினில் தண்ணீர் சென்று பழுதாகி விட்டது. இதனை சரி செய்து அதற்கான செலவு தொகை கேட்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காரின் உரிமையாளர் குமாரசாமி மனுதாக்கல் செய்தார். முந்தைய ஆண்டில் வேறு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு பெற்றிருந்த போது இழப்பீடு பெற்றதை தெரிவிக்காமல், தங்களிடம் காப்பீடு பெற்று உள்ளதால் காருக்கு பழுது நீக்க ஏற்பட்ட செலவு தொகையை தர முடியாது என இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்து விட்டது.

இது குறித்து குமாரசாமி, கடந்த 2021-ம் ஆண்டில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி வீ. ராமராஜ் தீர்ப்பு கூறினார். அதில் இன்சூரன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட செலவு தொகையை தர மறுத்தது சேவை குறைபாடு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் காரை சரி செய்த செலவு தொகையிலிருந்து 20 சதவீதம் கழித்து கொண்டு மீதிதொகை ரூ.23 லட்சத்து 74 ஆயிரத்து 792 மற்றும் அந்த சம்பவம் ஏற்பட்ட நாளிலிருந்து தற்போது வரை 9 சதவீத வட்டி ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவற்றையும், இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.36 லட்சத்து 84 ஆயிரத்து 792-ஐ இன்சூரன்ஸ் நிறுவனம் 4 வார காலத்திற்குள் தொழில் அதிபருக்கு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்