மாற்று இடம் வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம்
மேல்விஷாரத்தில் நீர்நிலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வசித்தவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் காந்தி கலந்துகொண்டார்.
மேல்விஷாரத்தில் நீர்நிலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வசித்தவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் காந்தி கலந்துகொண்டார்.
ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மேல் விசாரம் நகராட்சி சாதிக் பாஷா நகரில் நீர் நிலை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 353 வீடுகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து, அங்கு வசித்து வந்தவர்களுக்கு அருகாமையில் உள்ள வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடங்களில் மாற்று இடம் வழங்கிட நடவடிக்கை எடுப்பது குறித்து வக்பு வாரிய அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்.
மாற்று இடம்
அப்போது வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தை மக்களுக்கு வழங்கிட வேண்டிய வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வக்பு வாரிய தலைமையிடத்தில், பள்ளிவாசல் தர்மகர்த்தாவுக்கு மனு வழங்கலாம், வக்பு வாரிய தலைமை அனுமதி அளிக்கும் பட்சத்தில் வீடு இல்லாத நபர்களுக்கு வீடு கட்டுவதற்கான இடத்தினை வழங்கிடலாம் என தெரிவித்தனர்.
பின்னர் அதற்கான பணிகளை மேற்கொள்ள வருவாய்த்துறை மற்றும் வக்பு வாரிய பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
வக்பு வாரியத்திற்கு சொந்தமான 57 ஏக்கர் இடம் மேல்விஷாரம் பகுதியில் உள்ளது. இதில் 3.5 ஏக்கர் நிலம் தனியார் ஒருவர் போலி பட்டா மூலம் ஆக்கிரமித்துள்ளார், அதனை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் முகமது அமீன், நகராட்சி ஆணையாளர் பிரீத்தி, தாசில்தார் ஆனந்தன், வக்பு வாரிய அலுவலக கண்காணிப்பாளர் முகமது ஷபியுல்லா, ஆய்வாளர் முகமது இம்ரான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.