விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை நிறுவுதல்-கரைத்தல் தொடர்பான விதிமுறைகள் குறித்து ஆலோசனை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை நிறுவுதல்-கரைத்தல் தொடர்பான விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-09-12 18:43 GMT

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகளை நிறுவுதல்-கரைத்தல் தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை அரசின் விதிமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் பாதுகாப்பாக நடத்துவது குறித்தும், சிலைகளை நிறுவுதல் மற்றும் கரைத்தல் தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கும் வகையிலும் விழா அமைப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் பேசியதாவது:-

விநாயகர் சிலையை நிறுவ உள்ள இடம் அரசு இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறையிடம் இருந்து தடையின்மை சான்று பெறப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரியிடம் இருந்து ஒலிப்பெருக்கி பயன்படுத்துவதற்கான அனுமதி பெறப்பட வேண்டும். மின்சாரம் பெறப்படும் இடம் அல்லது தற்காலிக மின் வினியோகத்திற்கான கடிதம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் இருந்து பெறப்பட வேண்டும். இவ்வாறு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மீது வருவாய் கோட்டாட்சியரால் பரிசீலனை செய்து அனுமதி வழங்கப்படும்.

சட்டப்படி நடவடிக்கை

விழா அமைப்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று, மேற்சொன்ன அனுமதிகளை ஒவ்வொரு துறை அலுவலராக சந்தித்து பெறும் நிலையினை மாற்றி, ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 14-ந்தேதி வரை இருப்பார்கள். விழா அமைப்பாளர்கள் உங்களது அனுமதிகோரும் கடிதங்களை துறை அலுவலர்களிடம் வழங்கினால் முறையாக ஆய்வு செய்து ஓரிரு நாளில் உங்களுக்கான அனுமதி வழங்கப்படும்.

நீரில் கரைக்க பயன்படுத்தப்படும் சிலையானது தூய களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். நச்சு மற்றும் மக்காத ரசாயனங்களை கொண்டு சிலைகள் செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அவ்வாறு சிலை தயாரிப்பதோ, அந்த சிலையினை நீரில் கரைக்க பயன்படுத்துவதோ கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

நிறுவப்பட உள்ள சிலையின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதர வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான, பாதுகாப்பான முறையில் சிறப்பாக கொண்டாட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்