திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு கட்டுமான தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்

திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு கட்டுமான தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-20 18:23 GMT

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாதம் மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இத்திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு, பதிவு செய்து 3 ஆண்டுகள் பதிவு மூப்பு பெற்ற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், 40 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறும் அனைவருக்கும் எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிறுவனம் 100 சதவீத வேலை வாய்ப்பினை உறுதி செய்துள்ளது. கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர், கார்பெண்டர் மற்றும் சாரம் கட்டுபவர் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். 3 மாத பயிற்சியில் முதல் ஒரு மாதம் தையூரில் உள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும், அடுத்த 2 மாதங்கள் காஞ்சீபுரம் மாவட்டம் நீவளூரில் அமைந்துள்ள எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் நடைபெறும். மேலும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெறும். இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தினமும் ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்தொகையில் இருந்து உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது நலவாரிய அட்டை, கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்டவற்றின் நகல்களுடன் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானம் அருகே உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்