வருகிற 15-ந்தேதி முதல் அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடக்கம் - மெட்ரோ ரெயில் நிறுவனம்

அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க ரெயில் பாதை அமைப்பதற்காக சுரங்கம் தோண்டும் பணி வருகிற 15-ந்தேதி தொடங்க உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-11-22 04:32 GMT

மெட்ரோ ரெயில்

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து 2-வது கட்டமாக ரூ.61 ஆயிரத்து 843 கோடியில் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த திட்டத்தில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ., மாதவரம் முதல் - சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ., மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 48 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

128 ரெயில் நிலையங்கள்

இந்த வழித்தடங்களில் 128 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அதன்படி கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வழித்தடத்தில் 30, மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையே 48, மாதவரம்- சிறுசேரி சிப்காட் இடையே 50 ரெயில் நிலையங்களை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வருகிறது.

இந்த திட்டப்பணிகளை நிறைவேற்ற கட்டுமான நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் மாதவரம் முதல்-சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தூரத்துக்கான பணிகளில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள பூங்காவில் மெட்ரோ ரெயிலுக்கான சுரங்க ரெயில் நிலையம் அமைப்பதற்காக 300 மீட்டர் நீளத்துக்கு ரெயில் நிலைய சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது.

15-ந்தேதி...

கிரீன்வேஸ் சாலையில் உள்ள பூங்காவில் அமைக்கப்படும் சுரங்க ரெயில் நிலையத்துக்கான தரைதளத்துக்கான காங்கிரீட் தற்போது போடப்பட்டு உள்ளது. 48 மணிநேரத்துக்கு பிறகு அடுத்த கட்டப்பணிகள் இங்கு தொடங்க இருக்கிறது. அடுத்த வாரம் சுரங்கம் தோண்டும் எந்திரம் (டணல் போரிங் எந்திரம்) பொறுத்தப்பட உள்ளது.

இந்தபணி நிறைவடைந்த உடன் டிசம்பர் 15 முதல் 20-ந்தேதிக்குள் கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து அடையாறு பணிமனை நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்க இருக்கிறது.

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் கூவத்தின் கீழ் சுரங்க ரெயில் நிலையம் அமைத்தது போன்று அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.

மேற்கண்ட தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்