மண்சரிவு ஏற்படுவதை தடுக்க தடுப்புச்சுவர் கட்டும் பணி

கோத்தகிரி-கோடநாடு சாலையில் மண்சரிவு ஏற்படுவதை தடுக்க 5 இடங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.

Update: 2022-06-19 12:44 GMT

கோத்தகிரி,

கோத்தகிரி-கோடநாடு சாலையில் மண்சரிவு ஏற்படுவதை தடுக்க 5 இடங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.

தடுப்புச்சுவர் கட்டும் பணி

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கோத்தகிரி சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை பெய்கிறது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதைதொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மண்சரிவு ஏற்படுவதை தடுக்க தடுப்புச் சுவர் கட்டுவது, மழைநீர் கால்வாய் அடைப்புகளை சுத்தம் செய்வது, குறுகிய வளைவுகளை விரிவாக்கம் செய்வது, சாலையோரம் மழைநீர் கால்வாய்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் 5 இடங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.2 கோடியே 39 லட்சம் செலவில் கேர்பெட்டா, செம்மண் முடக்கு, வார்விக் எஸ்டேட் சாலை உள்பட 5 இடங்களில் தலா 130 மீட்டர் நீளத்திற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.

மழைநீர் கால்வாய்

அந்த பகுதிகளில் சாலையை அகலப்படுத்தி, தடுப்புச்சுவர் கட்டப்படுகிறது. மேலும் குறுகிய வளைவுகளில் வாகனங்கள் எளிதில் செல்லும் வகையிலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தடுப்புசுவர் இடையே மழைநீர் செல்லும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 3 இடங்களில் பணிகள் நிறைவடைந்து, பிற இடங்களில் பணி விரைவாக நடந்து வருகிறது.

இதுகுறித்து கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கணேசன் கூறும்போது, பருவமழை பெய்யும் போது மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபடாமல் இருக்க, சாலையோரங்களில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. மழைநீர் வழிந்தோடி சாலைகள் சேதமடைவதை தடுக்க, சாலையின் இருபுறமும் அகலப்படுத்தி கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மழைநீர் கால்வாய்களை புதுப்பிக்கும் பணி, கால்வாய் அடைப்புகளை நீக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் மழை காலத்தில் மண்சரிவு ஏற்படுவது குறையும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்