புதிய ரேஷன் கடை கட்டும் பணி தொடக்கம்

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சேண்டாகோட்டை ஊராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.;

Update:2023-09-26 02:41 IST

கரம்பயம்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சேண்டாகோட்டை ஊராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பழுதடைந்த ரேஷன் கடை

பட்டுக்கோட்டை அருகே சேண்டாகோட்டை ஊராட்சியில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் சேண்டாகோட்டை ஊராட்சியை சேர்ந்த 410-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர்.

இந்த ரேஷன் கடை கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. மழைநீர் கட்டிடத்துக்குள் ஒழுகி அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் நனைந்து வீணாகி வந்தது.

பொதுமக்கள் சிரமம்

ரேஷன் கடையில் பொருட்கள் வைக்க முடியாமல் அருகே மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் வைத்து அங்கிருந்து தினசரி எடுத்துக்கொண்டு வந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வந்தனர்.

இதனால் ரேஷன் கடை ஊழியர்களும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டனர். இந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

புதிய கட்டிடம் கட்டும் பணி

இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணிக்காக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மாவட்ட ஊராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.12.30 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.இதையடுத்து ரேஷன் கடை கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் 3 மாதங்களுக்குள் முடிவடைந்து, புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்