ரூ.14¼ கோடியில் வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி
பரமக்குடி அருகே ரூ.14¼ கோடியில் வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.;
பரமக்குடி,
பரமக்குடி அருகே ரூ.14¼ கோடியில் வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.
உயர்மட்ட பாலம்
பரமக்குடி கோட்டம் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் மூலம் பரமக்குடி அருகே உள்ள பொட்டிதட்டி, மந்தி வலசை, கள்ளியடியேந்தல், வல்லம், பகைவென்றி சாலையில் வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.மழைக்காலங்களில் வைகை ஆற்றில் வெள்ளம் வரும் போது சுற்றுப்புற கிராம மக்கள் வைகை ஆற்றில் கயிறு கட்டி நடந்து வரும் அவல நிலை இருந்து வந்தது. எனவே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் பயனாக தற்போது ரூ.14.24 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட உள்ளது. அதற்கான பணியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். நவாஸ் கனி எம்.பி, போகலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சத்யாகுணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலந்து கொண்டவர்கள்
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன், பரமக்குடி ஆர்.டி.ஓ. முருகன், மாநில தீர்மானக்குழு துணைத்தலைவர் திவாகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன், மாவட்ட கவுன்சிலர் வக்கீல் கதிரவன், போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் வக்கீல் பூமிநாதன், பொட்டிதட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், செவ்வூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா, முன்னாள் போகலூர் யூனியன் முன்னாள் தலைவர் நாகநாதன், பரமக்குடி ஒன்றிய கவுன்சிலர் நதியா மனோகரன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி துரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.