ரூ1 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி
கல்வராயன்மலையில் ரூ1 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி உதயசூரியன் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்
கச்சிராயப்பாளையம்
கல்வராயன்மலையில் குண்டியாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட நொச்சிமேடு கிராமத்தில் இருந்து கருவேலம்பாடி வரை சுமார் 6 கிலோமீட்டர் தூர சாலையை சீரமைக்க அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் இதற்கு வனத்துறையின் அனுமதி பெற வேண்டி இருந்ததால் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. சாலை குண்டும், குழியுமாக இருந்ததால் பொதுமக்கள் சென்று வர கடும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியனின் தீவிர முயற்சியால் வனத்துறையினரின் அனுமதி பெற்று சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதை உதயசூரியன் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, உதவி பொறியாளர் அருண்ராஜா, ஊராட்சிமன்ற தலைவர்கள் கல்யாணிகிருஷ்ணன், பாப்பாத்திசீனிவாசன், செல்வராஜ், ரத்தினம், ஒன்றிய செயலாளர்கள் சின்னத்தம்பி, கிருஷ்ணன், மாதவச்சேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வெங்கடேசன், ரபீக், மாணிக்கம், ஒன்றிய கவுன்சிலர் செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.