கடலூர் சிறை அதிகாரியை குடும்பத்துடன் கொல்ல சதி திட்டம்?
கடலூர் சிறை அதிகாரியின் வீட்டிற்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. கைதியிடம் செல்போன் பறிமுதல் செய்ததில் ஏற்பட்ட தகராறின் காரணமாக அதிகாரியை குடும்பத்துடன் கொல்ல சதி திட்டம் நடந்ததா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
கடலூர்,
கும்பகோணம் அருகே சுவாமி மலையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33). இவர் கடலூர் மத்திய சிறையில் உதவி சிறை அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இதற்காக அவர் தனது குடும்பத்தினருடன் மத்திய சிறை அருகே உள்ள உதவி சிறை அலுவலர்களுக்கான குடியிருப்பில் வசித்து வருகிறார்.
கடந்த 24-ந்தேதி முதல் மருத்துவ விடுப்பில் உள்ள அவர், சொந்த வேலை காரணமாக கும்பகோணம் சென்றார். இதனால் வீட்டில் மணிகண்டனின் தாய் சாவித்ரி, தந்தை ராமலிங்கம், மனைவி பவ்யா (32) மற்றும் 2 மகன்கள் இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு பவ்யா தனது மாமனார், மாமியார் மற்றும் குழந்தைகளுடன் சாப்பிட்டு விட்டு தனித்தனி அறையில் படுத்து தூங்கினர்.
தீ வைத்த மர்மநபர்கள்
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சாவித்ரி கழிவறை செல்வதற்காக எழுந்தார். அப்போது சமையல் அறை ஜன்னல் அருகே மர்மநபர்கள் 2 பேர் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சாவித்ரியை பார்த்த உடன், ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி, தீ வைத்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. உடனே அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு எழுந்த பவ்யா உள்ளிட்டோர் தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பாத்திரங்கள், அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது.
கைரேகைகள் பதிவு
இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்திய போது, மணிகண்டன் குடியிருந்த வீட்டின் பின்புறம் 2 கேன்கள் கிடந்தது. அதில் ஒரு கேனில் பாதியளவு பெட்ரோல் இருந்தது. உடனே அதனை கைப்பற்றிய போலீசார், பெட்ரோல் ஊற்றி மணிகண்டன் குடும்பத்தினரை கொலை செய்ய முயன்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
ஐ.ஜி. விசாரணை
விசாரணையில் கடந்த 8-ந் தேதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த எண்ணூர் கைதி தனசேகரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்த போது, மணிகண்டனுக்கும் தனசேகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது தெரியவந்தது. இதன் காரணமாக தனசேகர் கூலிப்படையை ஏவி, மணிகண்டன் குடும்பத்தினரை உயிருடன் எரித்து கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் என போலீசாா் சந்தேகிக்கின்றனா்.
இருப்பினும் தனசேகர் கூலிப்படையை ஏவி மணிகண்டன் குடும்பத்தினரை கொலை செய்ய முயற்சி செய்தாரா? அல்லது வேறு யாரேனும் கொலை முயற்சியில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சிறைத்துறை ஐ.ஜி. தேன்மொழி, டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் நேற்று மாலை சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். பின்னர் மணிகண்டனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி விட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.