என்.எல்.சி. நில விவகாரத்தில் இழப்பீடு கோரி பாதிக்கப்பட்டோர் அணுகினால் பரிசீலனை: ஐகோர்ட்டு உத்தரவு
பாதிக்கப்பட்டவர்கள் ஐகோர்ட்டை அணுகினால் சட்டப்படி பரிசீலிக்கப்படும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை,
நெய்வேலி என்.எல்.சி. 3-ம் சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்காக கரிவெட்டி, கரைமேடு, கத்தாழை, மும்முடிச்சோழன், மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி ஆகிய கிராமங்களில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்த உரிமையாளர்கள் குடும்பத்தினருக்கு வேலை வழங்கக்கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.ராமமூர்த்தி வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டதா? இழப்பீடு வழங்கப்பட்டதா? என்பது உள்ளிட்ட விவரங்கள் மனுவில் இடம் பெறவில்லை. நிலம் கையகப்படுத்தப்பட்டதால், மனுதாரருக்கு பாதிப்பு இல்லை.பாதிக்கப்பட்டவர்கள் ஐகோர்ட்டை அணுகினால் சட்டப்படி பரிசீலிக்கப்படும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.