சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
27-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
27-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோட்டை மாரியம்மன் கோவில்
சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்ததால் வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
நேற்று காலை யாகசாலை அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. தொடர்ந்து காலை 9.30 மணி முதல் 10.15 மணி வரை மங்கள இசை, கணபதி வழிபாடு, சங்கல்பம், புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், மகா கணபதி ஹோமம், கோ பூஜை, தீபாராதனை உள்ளிட்டவை நடந்தது.
கொடிமரம் பிரதிஷ்டை
பின்னர் 10.15 மணி முதல் 11.30 மணிக்குள் கோவில் வளாகத்தில் ராட்சத கிரேன் மூலம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்ட புதிய கொடிமரம் மேளதாளம் முழங்க பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கிருந்த பக்தர்கள் 'தாயே பராசக்தி' என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர். கொடி மரம் மீது பூக்கள் தூவினர். பின்னர் பக்தர்கள் கொடி மரத்தை சுற்றி வந்து தொட்டு வணங்கினர்.
முன்னதாக கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், குங்குமம், பன்னீர், திருமஞ்சனம், விபூதி உள்பட பல்வேறு திரவியங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அவர்களுக்கு கோவிலில் பிரசாதம் வழங்கப்பட்டது. பிற்பகலில் ராஜகோபுரம் மற்றும் மணிமண்டப விமான கலசங்களுக்கு பாலாலயம் நடந்தது.
33 அடி உயரமான கொடிமரம்
நிகழ்ச்சியில் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல், இந்து சமய அறநிலையத்துறை மண்டல துணை ஆணையர் சரவணன், செயல் அலுவலர் அமுதசுரபி, நகை மதிப்பீட்டு அலுவலர் தர்மராஜ், அறங்காவலர்கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் சாந்தமூர்த்தி, சரவணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சத்யா, மெய்யனூர் பகுதி துணை செயலாளர் எஸ்.டி.குமார், எஸ்.டி. சாமில் குழும உரிமையாளர் எஸ்.டி.ரவி, எம்.ஜி.ஆர். மன்ற இளைஞர் அணி செயலாளர் அசோக்குமார், வி.ராஜூ, மயில்ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என். சக்திவேல் கூறும் போது, கோட்டை மாரியம்மன் கோவிலில் ரூ.12¼ லட்சம் மதிப்பில் 33 அடி உயரம் கொண்ட புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த கொடி மரம் வேங்கை மரத்தால் செய்யப்பட்டது. இந்த மரத்தில் 26 பித்தளை கவசம் பொருத்தப்படுகிறது. கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது என்றார்.