உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

Update: 2023-06-06 18:45 GMT

ஆர்.எஸ்.மங்கலம், 

3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

பழமையான கோவில்

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ராமநாதபுரம் சமஸ்தான மற்றும் தேவஸ்தான தர்மகர்த்தா ராணி பிரம்ம ராஜேஸ்வரி நாச்சியாருக்கு பாத்தியப்பட்ட உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. 3000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் உள்ள வெயில் உகந்த விநாயகரை ராமபிரான் சீதையை மீட்க இலங்கைக்கு செல்லும் வழியில் பூஜித்து சென்றதாக ராமாயண புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மிக பழமையான இந்த கோவிலில் விநாயகர் வேண்டியவருக்கு வேண்டிய வரத்தை அள்ளி கொடுப்பதாக பக்தர்களின் நம்பிக்கை.

மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று(புதன்கிழமை) நான்காம் கால யாக பூஜையும், பூர்ணகுதி, தீபாராதனையும், 5-ம் கால யாக பூஜையும் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். நாளை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 7.45 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், கோபூஜையும், நாடிசந்தானமும், காலை 9.45 மணிக்கு மகாபூர்ணகுதி, தீபாராதனையும், காலை 10.45-க்கு மேல் 11.45-க்குள் விநாயக ருக்கு கும்பாபிஷேக விழாவும் நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருக்கல்யாணம்

மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், விநாயகருக்கு சித்தி, புத்தி ஆகிய தெய்வங்களுடன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து உலக நன்மைக்காக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபஆராதனையும் நடைபெற உள்ளது. உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை காண வெளிநாட்டில் வாழும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்களும், ராமநாதபுரம் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்