ராகுல்காந்தி பாதயாத்திரையில் காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும்; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேச்சு

ராகுல்காந்தி பாதயாத்திரையில் காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

Update: 2022-08-23 20:30 GMT

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பாளையங்கோட்டை மகாராஜாநகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது. காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல்காந்தி எம்.பி., கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். வருகிற செப்டம்பர் 8-ந் தேதி காலை, கன்னியாகுமரியில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்குகிறார். 10-ந் தேதி வரை, 3 நாட்கள் தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார். தொடர்ந்து 150 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு, சுமார் 3500 கி.மீ. தூரத்தை கடந்து காஷ்மீரை சென்றடைகிறார்.

இந்த பாதயாத்திரை தொடக்க விழாவில் நெல்லை மாவட்டத்தில் இருந்து திரளான தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும். பா.ஜனதா ஆட்சி காலத்தில் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. காங்கிரஸ் கட்சியை யாராலும் அழிக்க முடியாது. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும். மக்களிடம் பா.ஜனதா ஆட்சியின் அவலங்களை எடுத்து கூற வேண்டும். கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபட வேண்டும், என்றார். கூட்டத்தில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வீ.பி.துரை, ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத்தலைவர் வக்கீல் காமராஜ், வட்டார தலைவர் வாகைதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ராகுல்காந்தி வருகிற செப்டம்பர் 8-ந் தேதி காலை, கன்னியாகுமரியில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்குகிறார். இந்த தொடக்க விழாவில் நெல்லை மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரம் பேர் கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்