கும்பகோணத்தில், கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ரெயில் மறியல்

ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில், கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் நாகையில், மோடி உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

Update: 2023-03-23 20:35 GMT

ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில், கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் நாகையில், மோடி உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டு, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறியது.

பரபரப்பான இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பு வெளியானதும் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பெரும் கொந்தளிப்புக்கு ஆளாயினர்.

கே.எஸ். அழகிரி தலைமையில் ரெயில் மறியல்

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்வதற்காக கும்பகோணம் ரெயில் நிலையம் வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் இருந்து சென்னை நோக்கி வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை கும்பகோணம் ரெயில் நிலையத்தில் கே.எஸ். அழகிரி தலைமையிலான காங்கிரசார் மறித்து ரெயில் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோஷம் எழுப்பினர்

மேலும் ரெயில் தண்டவாளத்தில் நின்றபடி பா.ஜனதாவை கண்டித்து காங்கிரஸ் கொடியை கையில் ஏந்தியபடி கோஷம் எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் மாநில துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன், கும்பகோணம் நகர தலைவர் மிஸ்சாவுதீன் உள்ளிட்ட காங்கிரசார் பங்கேற்றனர்.

ரெயில் நிறுத்தம்

இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் ெரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ெரயில்வே போலீசார், கும்பகோணம் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கே.எஸ். அழகிரி உள்ளிட்ட காங்கிரசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரெயில் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டது.

இந்த ெரயிலில் கே.எஸ். அழகிரி செல்வதாக இருந்தது. ஆனால் ெரயில் புறப்பட்டு செல்வதை அறிந்த காங்கிரஸ் கட்சியினர், அந்த ெரயிலை நிறுத்தி கே.எஸ். அழகிரியை ெரயிலில் ஏற்றி அங்கிருந்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக கே.எஸ் அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

அப்புறப்படுத்த விரும்புகிறது

ராகுல் காந்தியை இந்தியாவை விட்டு அப்புறப்படுத்த பா.ஜனதா விரும்புகிறது. அவரை நசுக்கி அவரது வளர்ச்சியை தடுக்க பார்க்கிறது. இந்திய ஜனநாயகத்தை பற்றி ஐரோப்பிய நாடுகள் இன்றும் பெருமையாக பேசி வருகின்றன. ஆனால் ஜனநாயகத்தை நாடாளுமன்றத்தில் செயல்பட விடாமல் பா.ஜனதா முடக்கி வருகிறது. இது குறித்து கருத்து கூறினால் தேச விரோத செயலில் ஈடுபடுவதாக பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.

பா ஜனதாவுக்கு எதிராக கருத்து கூறினால் அது தேசவிரோதம் ஆகுமா?. இதனை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதானிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறினால் அதையும் தேச விரோதம் என பா.ஜ.க. கூறி வருகிறது. இந்தியா, அதானிக்கு சொந்தமானதா? என எங்களுக்கு தெரியவில்லை.

அடக்குமுறையை கையாளுகிறது

ஜெர்மனியில் ஹிட்லர் எவ்வாறு அடக்குமுறையை கையாண்டாரோ அதேபோல் இந்தியாவில் பா.ஜனதா தனது அடக்குமுறையை கையாண்டு வருகிறது.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் அவற்றை ராகுல் காந்தி தகர்த்து எறிவார் என்பதில் எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்