காங்கிரஸ் தலைவர் பதவி: சென்னையில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்

சென்னையில் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று கொண்டு வரப்பட்டன.;

Update:2022-10-17 04:57 IST

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரதாப் பானு சர்மா, உதவி தேர்தல் அதிகாரிகள் நெய்யாற்றின்கரை சனல், கர்நாடகாவை சேர்ந்த அஞ்சலி நிம்பல்கர் ஆகியோர் நேற்று மாலை வாக்குப்பெட்டிகளுடன் சென்னை சத்தியமூர்த்தி பவன் வந்தனர். அவர்கள் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு, தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டறிந்தனர்.

காலை 10 மணி முதல்...

அதைத் தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரி பிரதாப் பானு சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 711 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக டெல்லியில் இருந்து 4 வாக்கு பெட்டிகளும், ஒரு பெட்டிக்கு 200 வாக்குச்சீட்டுகள் வீதம் 800 வாக்குச்சீட்டுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் திறந்து காண்பிக்கப்பட்டு மூடப்பட்டு தேர்தலுக்காக வைக்கப்படும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். மாலை 4 மணிக்கு தேர்தல் முடிவடைந்தவுடன் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டியின் மேல் பகுதி சீலிடப்பட்டு, அதில் தேர்தல் அதிகாரிகள் கையொப்பமிட்டு நாளை (இன்று) இரவே டெல்லி கொண்டு செல்லப்படும் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்