காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்; 60 பேர் கைது
நெல்லையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை 10 தலை ராவணன் போல் சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதற்கு காரணமான பாரதிய ஜனதா கட்சியையும், பிரதமர் நரேந்திர மோடியும் கண்டித்து நேற்று காங்கிரசார் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். அவர்கள் மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அங்கிருந்து பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக கூறி புறப்பட்டனர். அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த நெல்லை மாநகர போலீஸ் கிழக்கு பகுதி துணை கமிஷனர் ஆதர்ஷ் பச்சேரா, உதவி கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் காங்கிரசாரை தடுத்து நிறுத்தினார்கள்.
இதையடுத்து அங்குள்ள ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்து போலீஸ் வாகனங்களில் ஏற்றினர். அவர்களை அந்த பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.