ராகுல்காந்தியின் எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-26 22:30 GMT


ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

ராகுல் காந்தி எம்.பி. பதவியை நீக்கியதை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஒரு நாள் அறவழி போராட்டம், தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி மதுரை மாநகர், மாவட்டம் சார்பில் காந்தி பொட்டலில் உள்ள காந்தி சிலை முன்பு மாநகர மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் அறவழி போராட்டத்தை தொடங்கினர். நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை அனைவரும் காந்தி சிலை முன்பு அமர்ந்து அமைதியான வழியில் போராட்டத்தை நடத்தினார்கள்.

அப்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ராகுல் காந்தி எம்.பி. நீக்கத்தை கண்டித்தும், சபாநாயகர் மற்றும் மத்திய அரசையும் கண்டித்தும் பேசினார்கள். இதில், மாநகராட்சி கவுன்சிலர்கள் தல்லாகுளம் முருகன், எஸ்.எஸ்.போஸ், எஸ்.வி.முருகன், ராஜபிரதாபன், மாநில பொதுச்செயலாளர் சையது பாபு, நல்ல மணி, மகளிர் அணி மாநகர் மாவட்ட தலைவர் ஷானவாஸ் பேகம், மற்றும் நிர்வாகிகள் பறக்கும் படை பாலு, ரவிச்சந்திரன், சுமதி உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

சோழவந்தான்

சோழவந்தான் வட்டபிள்ளையார்கோவில் முன்பாக நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, வட்டார தலைவர்கள் பழனிவேல், முருகானந்தம், நகரத்தலைவர் முத்துப்பாண்டி, முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பரமசிவம் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் நூர்முகமது, மாவட்ட நிர்வாகி பவுன்ராஜ், வக்கீல் ராமசாமி, மனிதஉரிமை நிர்வாகி ஜெயமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ஜோதிராமலிங்கம், நாராயணன், முருகன் ஆகியோர் பேசினார்கள்.

முடிவில் டெய்லர் ரவி நன்றி கூறினார். இதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

திருமங்கலம்

எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு ஆதரவாக நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. அதன்படி நேற்று திருமங்கலத்தில் காந்தி சிலை முன்பாக சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. அற வழியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இளங்கோவன், மாநில தலைவர் பாண்டியன், நகர தலைவர் சவுந்தர பாண்டி மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். இதையொட்டி அமைதியான முறையில் காங்கிரஸ் கட்சியினர் காந்தி சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்