திருநங்கை மாணவிக்கு கலெக்டர் வாழ்த்து

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவிக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2023-05-11 18:42 GMT

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கடந்த 10.8.2021 அன்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் திருநங்கை மாணவி ஸ்ரேயா மேல்நிலைக் கல்வி தொடர ஆவன செய்யக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தார். அதன் அடிப்படையில் கலெக்டர் மேற்கொண்ட நடவடிக்கையால், அவர் பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்தாண்டு நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் தமிழ்நாடு அளவில் ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவராக தேர்வு எழுதிய திருநங்கை மாணவி ஸ்ரேயா 337 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்று உள்ளார்.

இதையடுத்து திருநங்கை மாணவி ஸ்ரேயா நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த கலெக்டர், தொடர்ந்து கல்லூரியில் சேர்ந்து நன்றாக படித்து பட்டம் பெற்று, நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும், மேற்படிப்பு பயில தேவையான அனைத்து உதவிகளையும் அரசின் சார்பில் செய்து தரப்படும் எனவும் தெரிவித்தார்.

மேற்படிப்பு பயில தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்த தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆகியோருக்கு திருநங்கை மாணவி ஸ்ரேயா நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்