கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல்
விழுப்புரம் அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
விழுப்புரம்
கோவில் திருவிழாவில் மோதல்
விழுப்புரம் அருகே உள்ள ஆரியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி மனைவி நாகமணி (வயது 50). இவருடைய அண்ணன் மகன் சுந்தர்ராஜன் என்பவரும், அதே பகுதியை சேர்ந்த ஜெகன் என்கிற ஜெகதீசன் (40) என்பவரும் ஆரியூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டதில் சுந்தர்ராஜன் வெற்றி பெற்றார். அதிலிருந்து இரு தரப்பினருக்கும் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்தபோது ஜெகதீசன் தரப்பினர், சுந்தர்ராஜன் தரப்பினரை மதிக்காமல் அவர்களே திருவிழா நடத்தியதால் இரு தரப்பினருக்கும் பிரச்சினை ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் திட்டி தாக்கிக்கொண்டனர்.
20 பேர் மீது வழக்கு
இந்த சம்பவத்தில் இரு தரப்பையும் சேர்ந்த சரவணன் (40), அவரது தம்பி சந்திரபாலன் (34), சதீஷ்குமார் (34), மாணிக்கம் மகன் விக்னேஷ் (22), ஜெகதீசன் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதில் நாகமணி கொடுத்த புகாரின்பேரில் ஜெகதீசன், ஜெயநிலவன், பாலசுப்பிரமணியன், ராகுல், விக்னேஷ், ஷோபன்ராஜ், நிர்மல்ராஜ், மருதுபாண்டி, கார்த்திக், சங்கர் ஆகிய 10 பேர் மீதும், இதேபோல் ஜெகதீசன் கொடுத்த புகாரின்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன், கார்த்திகேயன், செல்வக்குமார், சரண்ராஜ், ரவிச்சந்திரன், கனகராஜ், பெருமாள், சரவணன், சந்திரபாலன், சதீஷ்குமார் ஆகிய 10 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.