ரசாயன முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல்
காரைக்குடி பகுதியில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 12 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.
காரைக்குடி,
காரைக்குடி பகுதியில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 12 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவின் பேரிலும், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி வழிகாட்டுதலின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கடைகள், குடோன்கள், பழக்கடைகள் ஆகியவற்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பழங்களின் தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி காரைக்குடி அருகே சாக்கோட்டை வட்டார பகுதிக்குட்பட்ட புதுவயல், கண்டனூர், சாக்கோட்டை, கண்ணங்குடி பகுதியில் சாக்கோட்டை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தியாகராஜன் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறையினர் பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுவயல் மெயின் ரோடு மற்றும் கண்டனூர் பகுதியில் உள்ள பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்ட போது கார்பைடு கற்கள் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்து சுமார் 12 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். இதேபோல் புதுவயல் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்களை ஊசி மூலம் செயற்கை முறையில் சிவப்பு நிறமேற்றப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்து அங்கிருந்த கடை வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புகார் தெரிவிக்கலாம்
அதன் பின்னர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் கோடைக்காலம் தொடங்கியதால் பொதுமக்கள் தாகம் தீர்ப்பதற்காக பழக்கடைகள், ஜீஸ் கடைகளுக்கு செல்வது வழக்கம். சில கடைகளில் விற்பனைக்காக வைக்கப்படும் பழங்கள் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதால் அதை வாங்கி பயன்படுத்தும் பொதுமக்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு நோய்கள் ஏற்படுவதுண்டு. இதுதவிர சில கடைகளில் அழுகிய பழங்களை பதப்படுத்தி அதையும் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இத்தகைய செயல்களை தடுப்பதற்கு வாரந்தோறும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கடைகளில் ஆய்வு நடத்தி வருகிறோம். இதுதவிர சில கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்காக வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இறைச்சி கடைகள், மீன் கடைகளில் வாரந்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்கள் தாங்கள் வாங்கும் கடைகளில் பொருட்கள் கெட்டுபோனால் உடனடியாக உங்கள் பகுதியில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.