மாநாடு ஆலோசனை கூட்டம்:நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும்- துரை வைகோ பேட்டி

மதுரையில் நடைபெறும் மாநாடு நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் என துரை வைகோ கூறினார்.

Update: 2023-09-06 01:56 GMT


மதுரையில் நடைபெறும் மாநாடு நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் என துரை வைகோ கூறினார்.

ம.தி.மு.க. மாநாடு

மதுரை வளையங்குளத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க. மாநில மாநாடு வருகிற 15-ந் தேதி நடக்கிறது. அந்த மாநாடு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்வதற்காக ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தாண்டு அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு வியக்கும் வண்ணம் ம.தி.மு.க. கொண்டாட உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க. தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபணம் செய்யும் வகையில் மதுரை மாநாடு நடைபெறும்.

மனிதர்கள் இடையே பிரிவினை

புனிதமான இந்து மதத்தில் சாதிகளை உருவாக்கி, பெண்கள் சமமாக இருக்கக் கூடாது போன்ற மூடநம்பிக்கையை ஏற்படுத்தி மனிதர்களிடையே பிரிவினையை உருவாக்கினா். அதை தான் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

ஆனால் அவர் ஏதோ இந்து மதத்திற்கு எதிரானவர், இந்து மக்களுக்கு எதிரானவர் என்பது போல் திரித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு சாமியார், உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி கொடுப்பேன் என்று சொல்கிறார். இதையா இந்து மதம் சொல்கிறது. சாதி, மதத்தை வைத்து பேசுபவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்த அளவில் மதவாத சக்தி காலூன்ற கூடாது. பா.ஜ.க. தவறான தகவல்களை பரப்பி தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறார்கள். அதற்கு ஒரு போதும் திராவிட இயக்கங்கள் அனுமதிக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

தொடர்ந்து மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சை ஆகிய மண்டலம் சார்பில் மாநாடு தொடர்பான ம.தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக துரை வைகோ கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இதில் பொருளாளர் செந்தில்அதிபன், துணை பொது செயலாளர்கள். ராஜேந்திரன், ஆடுதுறை முருகன், எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், சின்னப்பா, ரகுராமன், மாவட்ட செயலாளர்கள் முனியசாமி, மார்நாடு, ஜெயராமன், செல்வராகவன், ராமகிருஷ்ணன், சுரேஷ், மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்