பெரியார் பல்கலைக்கழக படிப்பு மையத்தில் தேசிய கருத்தரங்கம்

Update:2023-02-03 00:15 IST

தர்மபுரி:

தர்மபுரி அடுத்த பைசுஅள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக படிப்பு மையத்தில் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய புவி அமைப்பியல் துறை சார்பில் உருவாக்கப்பட்ட பிளாட்டோ ஆப் ஜூயாலஜி சங்கம் சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் 3 நாட்கள் நடக்கிறது. கருத்தரங்கம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். புவி அமைப்பியல் துறை தலைவர் நந்தகுமார் வரவேற்றார். பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பாலகுருநாதன் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். இந்திய அரசின் அணு கனிம பிரிவுகள் ஆராய்ச்சி துறையின் பெங்களூரு மண்டல இயக்குனர் ஸ்ரீ மயங்க் அகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். புவி அமைப்பியல் துறை உதவி பேராசிரியர் சஞ்சய் காந்தி, சங்கத்தின் மாணவர் பிரிவு தலைவர் நிவேதிதா இந்த அமைப்பின் செயல்பாடுகளை எடுத்துரைத்தனர்.

இந்த கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் பிரிவு துணைத் தலைவி பூவிழி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் வித்யாசாகர், அருண் பாரதி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்