தமிழக அரசை கண்டித்துபிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 26 பேர் கைது
தமிழக அரசை கண்டித்து ஈரோட்டில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.;
தமிழக அரசை கண்டித்து ஈரோட்டில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிச்சை எடுக்கும் போராட்டம்
பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக அரசு பயன்படுத்தாமல் உள்ளதாக கண்டனம் தெரிவித்து, பா.ஜ.க. சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் ஈரோடு மூலப்பாளையம் நால்ரோடு பகுதியில் நேற்று காலை போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.எம்.செந்தில், துணைத்தலைவர்கள் குணசேகர், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
26 பேர் கைது
போராட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் சிவசுப்பிரமணியம், செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் நிர்வாகிகள் மாயவன், ஏ.கே.மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
அப்போது கட்சியினர் தங்களது கைகளில் உண்டியல்களை வைத்துக்கொண்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி 3 பெண்கள் உள்பட மொத்தம் 26 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை அருகில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.