'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update:2022-08-06 22:12 IST

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மின் விபத்து அபாயம்

அம்மையநாயக்கனூரை அடுத்த பொம்மணம்பட்டியில் மயானம் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது. அதற்கு இணைப்பு கொடுக்கப்பட்டு இருக்கும் மின்சார வயர்கள் கம்பத்துடன் தரையில் சாய்ந்து கிடக்கிறது. தற்போது மழைக்காலமாக இருப்பதால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரதிஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.

சாக்கடை கால்வாய் சேதம் 

கம்பம் டி.டி.வி. தினகரன் தெருவில் சாக்கடை கால்வாய் சேதம் அடைந்து விட்டது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே புதிதாக சாக்கடை கால்வாய் கட்டித் தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், கம்பம்.

அடிப்படை வசதி தேவை 

நிலக்கோட்டை ஒன்றியம் மாலையகவுண்டன்பட்டி ஊராட்சி குள்ளன் சேர்வைக்காரன்பட்டியில் தெற்கு தெருவில் சாலை, சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தெருவில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழைக்காலத்தில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு தெரு மோசமாக மாறிவிடுகிறது. எனவே சாலை, சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும்.

-அழகுராஜ், குள்ளன் சேர்வைக்காரன்பட்டி.

சாக்கடை கால்வாயில் குப்பைகள்

திண்டுக்கல் அறிவுதிருக்கோவில் பகுதியில் மெயின்ரோட்டில் இருந்து ரோஜாநகருக்கு திரும்பும் இடத்தில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

-ராஜாத்தி, திண்டுக்கல்.

பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பு

வேடசந்தூரில் இருந்து ஆர்.கோம்பை செல்லும் சாலையில் காளனம்பட்டி அருகே பிளாஸ்டிக் கழிவுகள் மொத்தமாக தீ வைத்து எரிக்கப்படுகின்றன. அதில் இருந்து வெளியேறும் நச்சு புகை காற்றில் கலந்து குடியிருப்பு பகுதி மற்றும் சாலைக்கு பரவுகிறது. இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

-லட்சுமிபதி, வேடசந்தூர்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

திண்டுக்கல்-பழனி சாலையில் நுகர்பொருள் வாணிப கிடங்கு அருகே சாலை ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அதில் சிலர் கழிவுகளையும் கொட்டுவதால் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அந்த குப்பைகளை அகற்றுவதோடு, சாலைஓரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். -லட்சுமி, திண்டுக்கல்.

தெருநாய்கள் தொல்லை

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கிராமத்தில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவில் மட்டுமின்றி பகலில் தனியாக செல்வோரை கூட நாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. சாலையின் குறுக்காக நாய்கள் ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். தெருநாய்களின் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபு, மயிலாடும்பாறை.

சுற்றுலா பயணிகள் தவிப்பு

தேனி மாவட்டம் கோம்பைத்தொழு மேகமலை அருவியில் பெண்கள் உடை மாற்றும் அறை முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் சுற்றுலா வரும் பெண் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே உடை மாற்றும் அறையை முறையாக பராமரிக்க வேண்டும்.

-வசந்த், கடமலைக்குண்டு.

சாலையின் நடுவே பள்ளம்

தேனி கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே சாலையின் நடுவே பெரிய பள்ளம் காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் வரும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்க நேரிடுகிறது. விபத்தை தடுக்க சாலையின் நடுவே இருக்கும் பள்ளத்தை மூடவேண்டும். -விக்னேஷ், தேனி.

தண்டவாளம் அருகே செல்பி

தேனி-மதுரை இடையே பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வந்து செல்லும் நேரத்தில் ஆண்டிப்பட்டி, குன்னூர், தேனி போன்ற இடங்களில் தண்டவாளத்தின் அருகே நின்று சில இளைஞர்கள் செல்பி எடுக்கின்றனர். இதனால் இளைஞர்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது. அதை தடுக்க உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

-ஆரோன், தேனி.

------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

Tags:    

மேலும் செய்திகள்