பரவனாற்று பாதையை நிரந்தரமாக மாற்றி அமைக்கும் பணி நிறைவு என்.எல்.சி. தகவல்

பரவனாற்று பாதையை நிரந்தரமாக மாற்றி அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டதாக என்.எல்.சி. தெரிவித்துள்ளது.

Update: 2023-08-23 19:45 GMT

நெய்வேலி, 

2-வது சுரங்க விரிவாக்க பணி

நெய்வேலியில் இயங்கி வருகிறது என்.எல்.சி. நிறுவனம். இங்குள்ள நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரியை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பாட்டில் உள்ளன.

இதில், 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய என்.எல்.சி. நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலப்பகுதியில் சுரங்கம் அமைக்க தேவையான ஆக்கப்பூர்வ பணியை, கடந்த சில மாதங்களாக நிர்வாகம் அவ்வப்போது முன்னெடுத்து வருகிறது.

இதில் பரவனாற்று பாதையில் மொத்தம் உள்ள 12 கிலோ மீட்டர் நீளத்தில், 10.5 கிலோ மீட்டர் நீளத்திற்கான ஆற்றுப்பாதை அமைக்கும் பணி ஏற்கனவே முடிக்கப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள 1.5 கிலோ மீட்டர் பகுதியில் பாதை அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கியது. பரவனாற்று பாதையின் தற்காலிக சீரமைப்பு பணி நடைபெறும் இடமானது, 2-வது சுரங்கத்தின் வெட்டு முகத்தில் இருந்து 60 மீட்டர் தொலைவில் உள்ளது.

பரவனாற்று பாதை மாற்றியமைக்கும் பணி

இந்த பரவனாறு 2-வது சுரங்கத்தின் வடமேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து 100 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான நீர்பிடிப்பு பகுதியில் இருந்து கிடைக்கப்பெறும் மழைநீரை கையாள வேண்டும், இந்த பகுதியில் பல கிராமங்களும், அந்த கிராமங்களை சுற்றி வயல்வெளிகளும் உள்ளன.

இடைவிடாத மற்றும் கனமழையின்போது ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கில் இருந்து கிராம மக்களையும் விவசாய நிலங்களையும் பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இதற்கான அவசியத்தையும், தேவையையும் கருத்தில் கொண்டு என்.எல்.சி. இந்தியா நிறுவனம் அதற்கான ஒரு நிரந்தர தீர்வாக பரவனாற்று பாதையை நிரந்தரமாக மாற்றியமைக்கும் முக்கிய பணியை மேற்கொண்டது. மொத்தம் 12 கிலோ மீட்டர் நீளமுள்ள பரவனாற்றின் பாதையை நிரந்தரமாக மாற்றியமைப்பதற்கான தோராயமான பரப்பளவு 18 ஹெக்டேர் ஆகும்.

நிலத்தடி நீர்மட்டம் மேலும் அதிகரிக்க...

ஏற்கனவே என்.எல்.சி. சுரங்கங்கள் மூலம் பரவனாறு நீரால், ஆண்டு முழுவதும் பல ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது பரவனாறு நிரந்தர மாற்றுப்பாதை அமைக்கப்படுவதால் பல ஏக்கர் கூடுதல் பரப்பளவிலான விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும். மேலும் பரவனாறு ஆற்றில் தொடர்ந்து இருந்து வரும் நீர் இருப்பின் காரணத்தால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் அதிகரிக்க இது உதவும்.

மேற்கண்ட தகவல் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்