மின்துறை தொடர்பான குறைகளை 'வாட்ஸ் அப்' செயலி மூலம் தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகம்

மின்துறை தொடர்பான குறைகளை ‘வாட்ஸ் அப்’ செயலி மூலம் தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

Update: 2022-06-19 23:04 GMT

சென்னை,

பொதுமக்கள் மின்துறை சார்ந்த குறைகளை தெரிவித்திட சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மின்னகம் என்ற புதிய மின்நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது.

இதையொட்டி மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்னகம் அலுவலகத்தில் நேரில் ஆய்வு செய்து மின்னகம் மேலும் சிறப்பாக செயல்பட துறை சார்ந்த அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புகார்களை தெரிவிக்க புதிய வசதி

மின்னகம் மூலம் இதுவரை 9 லட்சத்து 16 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டன, இதில் 9 லட்சத்து 11 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

'வாட்ஸ் அப்' செயலி மூலம் புகார்களை தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. காலிப்பணியிடங்கள் நிதிநிலைக்கேற்ப, தேவைகளுக்கேற்ப நிரப்பப்படும். வடசென்னை அனல்மின் நிலையத்தின் 3-வது யூனிட் டிசம்பர் மாத இறுதிக்குள் தொடங்கப்படும்.

எண்ணூர் அனல்மின் திட்டம்

எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் திட்டத்தின் முதல் யூனிட் 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் மற்றொரு யூனிட் உற்பத்தியை தொடங்கும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.

அடுத்த 5 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 220 மெகாவாட் அளவிற்கு மின்வாரியத்தின் சொந்த உற்பத்தியை நிறுவுதிறனில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கடலில் காற்றாலை

மத்திய அரசு நமக்கு தேவையான அளவிற்கு 21.92 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய ஆணை வழங்கி உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைந்த விலையில் நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடலில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது சம்பந்தமாக 5 நாள் பயணமாக ஸ்காட்லாந்து செல்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்