கூடுதலாக வாகன நிறுத்த கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் - மாநகராட்சி தகவல்

மாநகராட்சிக்கு உட்பட்ட வாகன நிறுத்தங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Update: 2022-06-16 01:26 GMT

இதுக்குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி சார்பில் வாகனங்கள் நிறுத்துவதற்காக 83 இடங்களில் சுமார் 7 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு இடங்கள் கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகன நிறுத்த இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.20-ம், மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.5-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி அதற்கான கட்டணத்தை செலுத்தினால் கட்டணம் வசூலிப்பவரின் மூலம் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். இந்த எஸ்.எம்.எஸ்-ல் உள்ள 'லிங்க்'-ஐ பயன்படுத்தி ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாநகராட்சிக்கு உட்பட்ட வாகன நிறுத்தங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் மாநகராட்சியின் '1913' என்ற தொலைபேசி எண்ணிலும். அந்தப் பகுதிக்குட்பட்ட கண்காணிப்பாளர் அல்லது உரிமம் ஆய்வாளரிடம் புகாரை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், "சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையின் சார்பில் கடந்த மே மாதம் 29-ந்தேதி முதல் ஜூன் மாதம் 13-ந்தேதி வரை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரிந்த 302 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550 வீதம் மொத்தம் ரூ.4 லட்சத்து 68 ஆயிரத்து 100 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்