பெண்ணை அரசு அதிகாரி அறைந்ததாக புகார்....! பழனி கோவிலில் பரபரப்பு
பழனி கோவிலில் அதிகாரிகளை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் பழனிமலையில் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் உள்ளது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் பழனி முருகன் கோவிலுக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலையோர கடைகளால் பக்தர்களுக்கு இடையூறு இருப்பதாக கோவில அதிகாரிகளுக்கு அதிக அளவில புகார் வந்துள்ளது.
இதனை அடுத்து சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியல் கோவில் அதிகாரிகள் இன்று ஈடுபட்டனர். அப்போது, பழனி கோவில் உதவி ஆணையர் லெட்சுமி, பெண் ஒருவரை தாக்கியதாக கூறி, 300-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனை தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் பக்தர்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது, இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று வியாபாரிகளிடம் கோவில் அதிகாரிகள் பேச்சுவார்ததை நடத்தினர்.
பின்னர், மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியை அதிகாரிகள் தொடர்ந்தனர். அப்போது கோவில் உதவி ஆணையர் லெட்சுமியும் உடன்வந்துள்ளார். இதனால் அதிகாரிகளுடன், சாலையோர வியாபாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கோவில் அதிகாரிகளை அவர்கள் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகின்றது.
அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அதிகாரிகளை பத்திரமாக மீட்டு கோவில் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் பழனி கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.