சப்-இன்ஸ்பெக்டருடன் பழக்கம் என்பதால் திருட்டு வழக்கு கிடப்பில் போடப்பட்டதாக புகார்: மதுரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு
சப்-இன்ஸ்பெக்டருடன் பழக்கம் என்பதால் திருட்டு வழக்கு கிடப்பில் போடப்பட்டதாக புகார் குறித்து மதுரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து முடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சப்-இன்ஸ்பெக்டருடன் பழக்கம் என்பதால் திருட்டு வழக்கு கிடப்பில் போடப்பட்டதாக புகார் குறித்து மதுரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து முடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கார் திருட்டு வழக்கு
மதுரை உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த சுரேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- எனக்கு சொந்தமாக கார் வைத்திருந்தேன். அந்த காரை இரவு நேரங்களில் உத்தங்குடி மந்தை சாவடி அருகில் நிறுத்தி வைப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 23.8.2022 அன்று இரவும் வழக்கம் போல மந்தை சாவடியில் காரை நிறுத்தி வைத்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். மறுநாள் காலையில் பார்த்தபோது அங்கு கார் இல்லை. இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தேன். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்த பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, இதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் எனது காரை திருடியது தெரிந்தது. ஆனால் மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் ராஜா என்பவரும், எனது காரை திருடிய பிரேம்குமாரும் நண்பர்கள். இதனால் என் வழக்கை கிடப்பில் போட்டுவிட்டனர். எனவே இந்த வழக்கை மாநகர் குற்றப்பிரிவு அல்லது வேறு ஏதேனும் விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
சப்-இன்ஸ்பெக்டருடன் பழக்கம் என்பதால் திருட்டு வழக்கு கிடப்பில் போடப்பட்டதாக புகார் குறித்து மதுரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து முடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாருக்கும், பிரேம்குமாருக்கும் இடையே தொழில் போட்டி இருப்பதால் அவர் மீது மனுதாரர் இந்த புகாரை தெரிவித்து உள்ளார் என்றார். விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
சம்பந்தப்பட்ட நாளன்று மனுதாரரின் காரை திருடிக்கொண்டு பிரேம்குமார் தப்பியது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. அப்போது இருந்து அவரும் தலைமறைவாகியுள்ளார்.
ஒரு புகார் குறித்து இருதரப்பினருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை அதிகாரியான சப்-இன்ஸ்பெக்டர் உரிய விசாரணையை நடத்தி இருக்க வேண்டும். அதுபோல சப்-இன்ஸ்பெக்டர் செயல்படவில்லை. எனவே மனுதாரரின் வழக்கு ஆவணங்களை மதுரை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் உடனடியாக விசாரணையை தொடங்கி, 5 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.