எரியாத மின்விளக்கு
கணபதிபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட அரசு மருத்துவமனை அருகில் இருந்து லெமூர் கடற்கரைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்ட புதிய மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இரவு வீடுகளுக்கு திரும்புவதற்காக புறப்படும்போது பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லிங்கம், கணபதிபுரம்.
பதாகைகளை அகற்ற வேண்டும்
மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஏராளமான கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இதனால், எப்போது அந்த பகுதி பரபரப்பாக காணப்படும். சமீபகாலமாக மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஏராளமான கட்சிக்கொடிகள், விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி பதாகைகள், கட்சி கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீமான், குலசேகரம்.
படித்துறை சீரமைக்கப்படுமா?
பூதப்பாண்டி அரசு கால்நடை மருத்துவமனையின் பின்புறம் பழையாறு பாய்கிறது. அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த ஆற்றில் குளிப்பதற்காக படித்துறை வசதியும் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி பொதுமக்கள் படித்துறையை பயன்படுத்தி வந்தனர். கடந்த ஆண்டு பெய்த மழை வெள்ளத்தில் படித்துறை சேதடைந்தது. இதையடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி முடியாத நிலையில் உள்ளது. எனவே, சேதமடைந்த படித்துறையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாராயணசாமி, பூதப்பாண்டி.
நிழற்குடை அமைக்க வேண்டும்
நாகர்கோவில் கோட்டார் ரெயில்நிலையம் வழியாக ஏராளமான பஸ்கள் செல்கின்றன. அவ்வாறு வரும் பஸ்களில் ஏறி கிராமங்களுக்கு செல்வதற்கு ரெயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள இடிலாக்குடி-ரெயில்நிலைய சாலை சந்திப்பில் நிற்கின்றனர். ஆனால், அந்த சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பயணிகள் வெயிலில் காத்து நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் நலன்கருதி அந்த சந்திப்பு பகுதியில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அனந்தநாராயணன், மருங்கூர்.
நடவடிக்கை தேவை
குளச்சலில் புதிதாக பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், தற்காலிகமாக அந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளியின் முன்பு பஸ்நிலையம் அமைக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் இருந்து பஸ்கள் ஒருவழியாக மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படவும், விபத்துகள் நிகழவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, தற்காலிக நிலையத்துக்கு வரும் பஸ்கள் அனைத்தும் ஒரே வழியாக வந்து செல்லவும், போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்க நகராட்சி நிர்வாகமும், போக்குவரத்து காவல் துறையையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபுதாய்ரு, குளச்சல்.
பொதுமக்கள் அவதி
இரணியலில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் அவசர தேவைக்காக தொடர்புகொள்ள வசதியாக தொலைபேசி உள்ளது. ஆனால், இந்த தொலைபேசி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் அவசர தேவைக்கு மின்வாரியத்தின் உதவியை பெறமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாாிகள் பழுதடைந்த தொலைபேசியை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜோசப் நேவிஸ், மாங்குழி.