புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா ராமநாதபுரம் பஞ்சாயத்து மேட்டுப்பட்டி கிராமம் இந்திரா காலனியில் வாறுகால் மற்றும் சிமெண்டு சாலை அமைப்பதற்காக தெருவினை தோண்டிப்போட்டு இரண்டு மாதங்களாகியும் எந்த பணியும் நடைபெறவில்லை. பொதுமக்கள் தெருவில் நடப்பதற்கும், வாகனங்களை பயன்படுத்துவதற்கும் இயலாத நிலை உள்ளது. இதனால் தினசரி வாழ்க்கை கடும் பாதிப்பிற்குள்ளாகிறது. எனவே கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-ஜெகதீஸ்வரன், மேட்டுப்பட்டி.
பயணிகளுக்கு இடையூறு
கடையநல்லூர் புதிய பஸ் நிலையத்தின் நுழைவுவாயிலை ஒட்டியவாறு இருசக்கர வாகனங்களை பலரும் நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் பஸ்சுக்காக காத்திருக்கும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பஸ் ஏறுவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-திருக்குமரன், கடையம்.
வீணாகும் குடிநீர்
சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அமைந்துள்ள குடிநீர் குழாயின் வால்வில் பழுது ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. மேலும் அங்கு தேங்கும் தண்ணீரால் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு நாய் மற்றும் பன்றிகளும் இந்த நீரை அருந்துவதால் மாசடைந்த குடிநீர், குழாய்களின் வழியே வீட்டு உபயோகத்திற்கும் செல்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-வைத்திலிங்கம், சாம்பவர்வடகரை.
சேதமடைந்த சாலை
கடையம் யூனியன் கருத்தப்பிள்ளையூரில் இருந்து கீழாம்பூர் செல்லும் சாலை மிகவும் சேதம் அடைந்த நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். குறுகலான இந்த சாலையை அகலப்படுத்தி உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்.
-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.
தபால் நிலையம் இடமாற்றம் செய்யப்படுமா?
குற்றாலத்தில் தபால் நிலையம் பல ஆண்டுகளாக மெயின் அருவிக்கு அருகே, குற்றாலம் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வந்தது. அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்படுத்தி வந்த இந்த தபால் நிலையம் தற்போது குற்றாலம் இராமாலயத்தில் ஒதுக்குப்புறமான, ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் போதிய பாதுகாப்பின்றி செயல்படுகிறது. இதனால் அனைவரும் மிகுந்த சிரமப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் அனைவருக்கும் பயன் தரும் வகையில் இந்த தபால்நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
-அம்பலவாணன், குற்றாலம்.