புகார் பெட்டி

புகார் பெட்டி;

Update:2023-03-30 00:15 IST

வாகன காப்பகமாக மாறிய பஸ் நிலையம்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பஸ் நிலையத்துக்கு அரசு டவுன் பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. பெரும்பாலான பஸ்கள் திருவேங்கடம் பஜாரிலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனால் பஜாரில் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி பயணிகள் பரிதவிக்கின்றனர். மேலும் பஸ் நிலைய வளாகத்தில் சிலர் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். எனவே வாகன காப்பகமாக மாறிய திருவேங்கடம் பஸ் நிலையத்துக்கு அனைத்து பஸ்களும் வந்து பயணிகளை ஏற்றி செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-ராமன், திருவேங்கடம்.

பஸ் வசதி அவசியம்

சங்கரன்கோவில் தாலுகா மருதன்கிணறு பஞ்சாயத்து ஆவுடையாள்புரம், மீனாட்சிபுரம், வன்னியம்பட்டி, கீழநீலிதநல்லூர் பஞ்சாயத்து தோணுகால் ஆகிய கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே மேற்கண்ட கிராமங்கள் வழியாக அரசு டவுன் பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-சுப்பிரமணியன், கீழநீலிதநல்லூர்.

ஆபத்தான மின்கம்பம்

தென்காசி அருகே கீழப்புலியூர் ரெயில் நிலையம் அருகில் சாலையோரம் இரும்பு மின்கம்பம் உள்ளது. சமீபத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, அந்த மின்கம்பத்தை சாலையோரம் மாற்றி அமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே சாலையின் நடுவில் உள்ள ஆபத்தான மின்கம்பத்தை சாலையோரம் மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-முத்து கோபாலகிருஷ்ணன், தென்காசி.

ஒளிராத தெருவிளக்குகள்

ஆலங்குளம் யூனியன் மாயமான்குறிச்சி பஞ்சாயத்து 3-வது வார்டு வாணியர் தெருவில் பல நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அஞ்சுகின்றனர். மேலும் அங்கு விஷ பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே அங்கு தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-முருகன், மாயமான்குறிச்சி.

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து காந்திநகர் 1-வது தெருவில் சிமெண்டு சாலை அமைப்பதற்காக வாறுகால் அமைக்கப்பட்டது. பின்னர் சிமெண்டு சாலை அமைக்காமல் பணிகளை கிடப்பில் போட்டனர். எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்கி நிறைவேற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-அம்ஜத், முதலியார்பட்டி.


Tags:    

மேலும் செய்திகள்