'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-01-04 17:54 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்

திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்துவில் இருந்து ரெட்டியபட்டி செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் கொடப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாரியப்பன், தோட்டனூத்து.

குண்டும், குழியுமான சாலை

திண்டுக்கல்லை அடுத்த பாலம் ராஜக்காபட்டியில் இருந்து அணைப்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-பாண்டி, ராஜக்காபட்டி.

குடிநீர் தட்டுப்பாடு

ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலக சாலை, பஸ் நிலைய பகுதி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் அமைக்கப்பட்ட பொது குடிநீர் குழாய்களில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே முறையாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, ஆண்டிப்பட்டி.

தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்

தேனி பாரஸ்ட் ரோடு 9-வது தெருவில் கொட்டப்படும் குப்பைகள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகின்றன. குப்பை கொட்டும் இடத்தின் அருகில் டிரான்ஸ்பார்மரும் உள்ளது. எனவே குப்பைகள் தீ வைத்து எரிக்கப்பட்டால் டிரான்ஸ்பார்மரில் தீப்பற்றி பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை தீ வைத்து எரிப்பதை தடுக்க வேண்டும்.

-தெருவாசிகள், பாரஸ்ட் ரோடு.

பூட்டி கிடக்கும் கழிப்பறை

சின்னமனூரை அடுத்த சீப்பாலக்கோட்டை காலனி பகுதியில் கட்டப்பட்ட பெண்களுக்கான கழிப்பறை நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பெண்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பறையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-கிராம மக்கள், சீப்பாலக்கோட்டை.

அள்ளப்படாத குப்பைகள்

ஆண்டிப்பட்டி தாலுகா செல்வ விநாயகர் தெருவில் கொடப்படும் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து வீடுகளுக்குள்ளும் விழுகின்றன. எனவே குப்பைகளை முறையாக அள்ளிச்செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேகரன், ஆண்டிப்பட்டி.

முகம் சுழிக்க வைக்கும் சுகாதார வளாகம் (படம்)

தேனி புது பஸ் நிலைய வளாகத்தில் உள்ள சுகாதார வளாகம் சுத்தப்படுத்தப்படாமல் உள்ளது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் சுகாதார வளாகத்துக்கு செல்லும் பயணிகள் முகம் சுழித்தபடியே கழிப்பறையை பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே சுகாதார வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துக்குமார், தேனி.

காய்ச்சல் பரவும் அபாயம்

பழனியை அடுத்த மொல்லம்பட்டியில் தனியார் சிலர் விதிமுறையை மீறி குடியிருப்பு பகுதியில் மீன் வளர்ப்பதற்காக பெரிய அளவில் தொட்டி வைத்துள்ளனர். தற்போது அதில் மீன்கள் இல்லை. ஆனால் தண்ணீர் தேங்கி உள்ளது. அதில் உருவாகும் கொசுப்புழுக்களால் எங்கள் பகுதியை சேர்ந்தவர்களுக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேன்பழனிசாமி, மொல்லம்பட்டி.

தெருநாய்கள் தொல்லை

பழனியை அடுத்த மேற்கு ஆயக்குடியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்களையும், வாகனங்களில் செல்பவர்களையும் தெருநாய்கள் துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.

-குமார், பழனி.

சாலைகள் சேதம்

திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோடு, பஸ் நிலையம் அருகில் உள்ள சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் சேதமடைந்த நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன் விபத்துகளும் அடிக்கடி நடக்கின்றன. எனவே சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், திண்டுக்கல்.

---------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

-----------------

Tags:    

மேலும் செய்திகள்